

உதகை:
ஊட்டியில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் ரூ.86 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை வழங்கியும், ரூ.57.86 கோடி மதிப்புள்ள திட்டப் பணிகளை துவக்கி வைத்தும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது:-
ஹவாலா ஃபார்முலா மூலம் ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றிபெற்றவர் தினகரன். ஆர்.கே.நகரில் 10 கட்சியுடன் கூட்டணி வைத்த தி.மு.க.வால் டெபாசிட் கூட பெற முடியவில்லை. கட்சியையும், ஆட்சியையும் அழிக்க நினைத்து எதிர்க்கட்சியுடன் கூட்டணி வைத்தவர் தினகரன்.
தினகரன் அணியில் உள்ளவர்கள் ஸ்லீப்பர்செல்கள். எங்கள் அணியில் உள்ளவர்கள் பத்தரை மாற்று தங்கம். 6 மாதத்திற்குள் ஆட்சியை கலைப்பேன் என ஹவாலா மூலம் வென்றவர் கூறுகிறார். அவர் தான் துரோகி.
டிடிவி தினகரன் கொஞ்ச நாட்களுக்குதான் கிடைத்த பதவியை அனுபவிக்க முடியும். 6 மாதத்தில் டிடிவி தினகரன் எங்கே இருக்க வேண்டுமோ அங்கே இருப்பார்.
8 மாதம் வரை நீங்கள் இருந்தால் தானே ஆட்சியை கலைக்க முடியும். ஜெயலலிதாவுக்கும் இயக்கத்திற்கும் விசுவாசமாக இருந்ததால் எங்களுக்கு பதவி கிடைத்தது.
உழைக்காமல் முன்னுக்கு வந்தவர் டிடிவி தினகரன். ஜெயலலிதா பிறந்த நாளில் அவர் அறிவித்தபடி மானிய விலையில் பெண்களுக்கு இருசக்கர வாகனம் தரப்படும்.
பசுந்தேயிலைக்கு கிலோ ஒன்றுக்கு ரூ 2 மானியம் வழங்கப்படும். தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் மண்டல் அலுவலகம் கோத்தகிரியில் அமைக்கப்படும்.
ரூ 2.73 கோடியில் உதகை நகராட்சியில் புதிய சாலைகள் அமைக்கப்படும். ரூ 44 லட்சம் செலவில் குன்னூர் பேருந்துநிலையம் விரிவுபடுத்தப்படும்.
நீலகிரியில் வாழும் பழங்குடியினரின் 500 குடியிருப்புகள் ரூ 5 கோடியில் பழுதுபார்க்கப்படும். ஜெயலலிதா பிறந்தநாளன்று, முதற்கட்டமாக 1 லட்சம் பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.