அ.தி.மு.க. அம்மா அணி மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: எடப்பாடி தலைமையில் 29-ந் தேதி நடக்கிறது

அ.தி.மு.க. அம்மா அணி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 29-ந் தேதி நடக்கிறது.
அ.தி.மு.க. அம்மா அணி மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: எடப்பாடி தலைமையில் 29-ந் தேதி நடக்கிறது
Published on

சென்னை:

சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. (அம்மா) மாவட்ட செயலாளர்கள் கூட்டம் 29-ந் தேதி காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. அம்மா அணியை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று கட்சி தலைமை வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளது.

முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்று 100 நாட்களில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள், தெருமுனை கூட்டங்களை நடத்த வேண்டும். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை ஏழை-எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி சீரும், சிறப்புமாக இந்த ஆண்டு முழுவதும் கொண்டாட வேண்டும் என்பது குறித்து மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோனைகள் வழங்கப்படும் என்று தெரிகிறது.

அ.தி.மு.க.வையும், இரட்டை இலை சின்னத்தையும் மீட்பதற்காக தேர்தல் கமிஷனில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்வது தொடர்பாக கடந்த மாதம் நடந்த கூட்டத்தில் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகளிடம் கையெழுத்து பெறவேண்டும் என்று மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதன்படி தொண்டர்களிடம் பெறப்பட்டுள்ள கையெழுத்து விவரங்கள் குறித்து மாவட்ட செயலாளர்களிடம் கேட்டறியப்படும் என்று தெரிகிறது.

அ.தி.மு.க. அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட முட்டுக்கட்டையை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் மாவட்டவாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்கள் ஆதரவை திரட்டி வருகிறார். எனவே ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த நிலைப்பாடு பற்றி கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

சில மாவட்ட செயலாளர்கள் மீது தொண்டர்கள் அளித்துள்ள புகார்கள் குறித்தும், உள்ளாட்சி தேர்தலை சந்திப்பதற்கான ஆயத்த பணிகள் குறித்தும் விவாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com