வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழலில் பிடிபட்ட ராஜீவ் சக்சேனா விசாரணை காவல் நீட்டிப்பு

இந்திய பிரமுகர்களுக்கு ரூ.362 கோடி லஞ்சப் பணம் இடைத்தரகர்கள் மூலம் கைமாறிய வழக்கில் சமீபத்தில் கைதான ராஜீவ் சக்சேனாவின் விசாரணை காவல் மேலும் 4 நாட்கள் நீட்டிக்கப்பட்டது. #EDcustody #AgustaWestlandcase #RajeevSaxena #custodyextended
வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழலில் பிடிபட்ட ராஜீவ் சக்சேனா விசாரணை காவல் நீட்டிப்பு
Published on

புதுடெல்லி:

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சியில் 2010-ம் ஆண்டு இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ரூ.3,600 கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டது. 

இதில் ரூ.362 கோடி லஞ்சப் பணம் இடைத்தரகர்கள் மூலம் கைமாறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.

இதில், விமானப்படை முன்னாள் தளபதி எஸ்பி தியாகி, அகஸ்டா வெஸ்ட்லேண்ட் மற்றும் பின்மெக்கானிகா நிறுவன இயக்குநர்கள் கியுசெப்பே ஓர்சி, புர்னோ ஸ்பாக்னோலினி ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதே விவகாரத்தில் சட்டவிரோதமாக வெளிநாட்டு பணம் இந்தியாவுக்கு வந்துள்ளதாக அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், அமலாக்கத்துறை கடந்த 18-7-2018 அன்று துணை குற்றப்பத்திரிகையை டெல்லி பாட்டியாலா ஹவுஸ் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. 

இந்த குற்றபத்திரிகையில் இந்தியா மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த 34 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது.  மேலும், இடைத்தரகர்களாக செயல்பட்ட வெளிநாட்டினர் கிறிஸ்டியன் மைக்கேல், கார்லோ ஜெரோசா, கைடோ ஹாஷ்கே, துபாய் வாழ் இந்தியரான ராஜீவ் சக்சேனா ஆகியோருக்கு எதிராக ஜாமினில் வெளிவராத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

இவர்களில் கிறிஸ்டியன் மைக்கேல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் துபாயில் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தலைமறைவாக இருந்த மற்றொரு இடைத்தரகர் ராஜீவ் சக்சேனா 31-1-2019 அன்று துபாயில் கைது செய்யப்பட்டு இந்தியா அழைத்து வரப்பட்டார். அவரிடம் கடந்த மூன்று நாட்களாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், டெல்லி பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள  நீதிமன்றத்தில் ராஜீவ் சக்சேனா இன்று ஆஜர்படுத்தப்பட்டார். பொருளாதார அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை மேலும் 4 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்தது. #EDcustody #AgustaWestlandcase #RajeevSaxena #custodyextended 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com