அன்னிய செலாவணி முறைகேடு: கார்த்தி சிதம்பரம் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு

அன்னிய செலாவணி முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து விமான நிலையங்களுக்கும் “லுக்அவுட் நோட்டீஸ்” அனுப்பியுள்ளது.
அன்னிய செலாவணி முறைகேடு: கார்த்தி சிதம்பரம் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு
Published on

சென்னை:

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம். இவர் தமிழக காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக உள்ளார்.

ஐ.என்.எக்ஸ் எனும் நிறுவனத்துக்கு கார்த்தி சிதம்பரம் அன்னிய முதலீட்டை பெற்றுக் கொடுத்தார். அதில் அவர் முறைகேடு செய்து இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் குற்றஞ்சாட்டியது. இதையடுத்து அவர் மீது அன்னிய செலாவணி முறைகேடு வழக்கு தொடரப்பட்டது.

அதன் பேரில் கார்த்தி சிதம்பரத்தின் சென்னை வீடு மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். மத்திய அரசின் இந்த நடவடிக்கை அரசியல் பழி வாங்கும் நடவடிக்கை என்று கார்த்தி சிதம்பரம் கூறினார்.

இதற்கிடையே அன்னிய செலாவணி முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணைக்கு டெல்லி அலுவலகத்துக்கு நேரில் வந்து ஆஜராக வேண்டும் என்று கார்த்தி சிதம்பரத்துக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் நோட்டீசு அனுப்பினார்கள். இந்த விசாரணைக்கு கார்த்தி சிதம்பரம் முழுமையான ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று சி.பி.ஐ. கூறியது.

இந்த நிலையில் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்தார். இதையடுத்து அதை தடுக்கும் நடவடிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் எடுத்துள்ளது.

கார்த்தி சிதம்பரத்தை தேடப்படும் குற்றவாளியாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் “லுக்அவுட் நோட்டீஸ்” அனுப்பப்பட்டுள்ளது.

அந்த லுக் அவுட் நோட்டீசில், கார்த்தி சிதம்பரம் வெளிநாட்டுக்கு செல்ல முயன்றால் அது பற்றி உடனே தகவல் தெரிவிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்திருப்பதால், அவர் வெளிநாட்டுக்கு தப்பி சென்று விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சி.பி.ஐ. விசாரணை தீவிரமான நிலையில் கடந்த மே மாதம் தன் நண்பர்களுடன் கார்த்தி சிதம்பரம் லண்டன் சென்றார். ஜூன் 1-ந்தேதி அவர் நாடு திரும்பினார். மீண்டும் அவர் வெளிநாடு செல்லக்கூடாது என்பதற்காக லுக்அவுட் நோட்டீஸ் விடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு கார்த்தி சிதம்பரம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com