தூர்தர்ஷன், அகில இந்திய வானொலியில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும்: ராமதாஸ்

தூர்தர்ஷன், அகில இந்திய வானொலி ஆகியவற்றில் பணியாற்றும் அதிகாரிகளுக்கும், பணியாளர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார்.
தூர்தர்ஷன், அகில இந்திய வானொலியில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும்: ராமதாஸ்
Published on

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பிரசார் பாரதி அமைப்பின் ஆளுகையில் இயங்கும் தூர்தர்ஷன், அகில இந்திய வானொலி ஆகியவற்றில் பணியாற்றும் அதிகாரிகளுக்கும், பணியாளர்களுக்கும் அக்டோபர் மாதத்திற்கான ஊதியம் வழங்கப்படவில்லை. உடனடியாக ஊதியம் வழங்க வலியுறுத்தி பல நகரங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. ஊழியர்களுக்கு குறித்த தேதியில் ஊதியம் வழங்கப்படாதது கண்டிக்கத்தக்கது.

வானொலி மற்றும் தொலைக்காட்சிப் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கான நிதி மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்திடமிருந்து வரவில்லை என்றும், அதனால் தான் ஊதியம் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. நிதி நெருக்கடியோ, வங்கியில் வைப்பீடு செய்து வட்டி பெறும் திட்டமோ எதுவாக இருந்தாலும் ஊழியர்களின் உழைப்புக்கான ஊதியத்தை தாமதமாக வழங்குவது பெரும் தவறு ஆகும். ஊழியர்களின் ஊதியத்தை கண்டிப்பாக வழங்கியே தீர வேண்டும் எனும் நிலையில் அதை குறித்த காலத்தில் வழங்காமல் பல மாதங்கள் தாமதித்து வழங்குவதன் காரணங்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஊழியர்களின் ஊதியத்தை குறித்த தேதியில் வழங்காமல் தாமதித்து வழங்குவது தொழிலாளர் நலச் சட்டங்களை மீறிய செயலாகும். எனவே, வானொலி மற்றும் தொலைக் காட்சி நிலையங்களில் பணியாற்றும் பணியாளர்களின் அக்டோபர் மாத ஊதியத்தை உடனடியாக வழங்க மத்திய அரசு ஆணையிட வேண்டும். அத்துடன் ஒப்பந்த ஊழியர்கள், மாவட்ட செய்தியாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய நிலுவையையும் விரைந்து வழங்க வேண்டும்.

X

Maalai Malar
www.maalaimalar.com