

அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்களுக்கு மருத்துவ பட்டமேற்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு முறை கடந்த 30 ஆண்டுகளாக இருந்து வருகிறது.
இந்த இட ஒதுக்கீட்டு முறையை எதிர்த்து டாக்டர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு அதனை ரத்து செய்தது. பொதுவான ஒதுக்கீட்டின் அடிப்படையில் உயர் மருத்துவ படிப்பு சேர்க்கை நடைபெற வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதற்கு தமிழகம் முழுவதும் உள்ள அரசு டாக்டர்கள், பயிற்சி மருத்துவர்கள், பட்ட மேற்படிப்பு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அரசு மருத்துவர்களுக்கு பட்ட மேற்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த மாதம் 19-ந் தேதி முதல் அரசு ஆஸ்பத்திரிகளில் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
உண்ணாவிரதம், மனித சங்கிலி, கடவுளுக்கு பலூன் மூலம் கோரிக்கை, மருத்துவரை உயிரோடு சமாதி கட்டுதல் போன்ற நூதன போராட்டங்கள் மூலம் அரசுக்கு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
டாக்டர்களின் போராட்டத்தால் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பாதிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தலைமை மருத்துவமனை, சென்னை உள்ளிட்ட 20 இடங்களில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, தாலுகா அளவில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் நகரம் முதல் கிராமம் வரையுள்ள அனைத்து ஆரம்ப சுகாதார ஆஸ்பத்திரிகளிலும் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரசு மருத்துவர்களின் போராட்டம் நேற்று முன்தினம் முதல் தீவிரம் அடைந்தது. அரசு ஆஸ்பத்திரிகளில் ஆபரேஷன்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அவசர அறுவை சிகிச்சைகளை மட்டும் மேற்கொள்வது என்றும் மற்ற தேதி வாரியாக நிர்ணயிக்கப்பட்ட ஆபரேஷன்களை தள்ளி வைப்பது என்றும் முடிவு செய்து தீவிர போராட்டத்தில் இறங்கினர்.
மருத்துவ மாணவர்களுக்கான வகுப்புகள் நடத்துவதையும் புறக்கணித்தனர். ஆபரேஷன் செய்வதை ஒத்திவைத்து டாக்டர்கள் இன்று 3-வது நாளாக போராட்டத்தில் குதித்ததால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் உள் நோயாளிகள் மட்டுமின்றி புற நோயாளிகளும் சிகிச்சை பெற முடியாமல் அவதிப்பட்டனர். ரத்த அழுத்தம், நீரழிவு, இருதயம், எலும்பு முறிவு, சிறுநீரகம், நரம்பியல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பிரிவுகளில் டாக்டர்கள் முழு அளவில் இல்லாததால் சிகிச்சை பெறுவதில் தாமதம் ஏற்பட்டது.
அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் பயிற்சி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஏழை-எளிய, நடுத்தர மக்கள் சிகிச்சை பெற முடியாமல் மணிக்கணக்கில் காத்திருந்தனர்.
சென்னையில் ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரி, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி, மனநல மருத்துவமனை, இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி, எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை, மகப்பேறு மருத்துவமனை, திருவல்லிக்கேணி கஸ்தூரி பாய் மகப்பேறு மருத்துவமனை, தண்டையார்பேட்டை தொற்றுநோய் ஆஸ்பத்திரி, கே.கே.நகர் அரசு ஆஸ்பத்திரி உள்ளிட்ட முக்கிய மருத்துவ மனைகளில் அனைத்திலும் புறநோயாளிகளுக்கு சிகிச்சை பெற முடியவில்லை.
அவசர ஆபரேஷன்களை மட்டுமே டாக்டர்கள் செய்தனர்.
தமிழகம் முழுவதும் அரசு ஆஸ்பத்திரிகளில் நடைபெற வேண்டிய சுமார் 2000 ஆபரேஷன்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இதனால் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.
சென்னையில் மட்டுமே 2000 ஆபரேஷன்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் டாக்டர்கள் போராட்டம் காரணமாக புறநோயாளிகள் நீண்ட வரிசையில் காத்து நிற்கும் நிலை உள்ளது. டாக்டர்கள் பணிக்கு வராததால் பெண்கள், முதியவர்கள், சிகிச்சை பெற முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
குழந்தை பிரசவ ஆபரேஷன், குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை, கண் அறுவை சிகிச்சை, மூளம், ஹெர்னியா, டான்சில், குழந்தைகளுக்கான நோய்கள் சிகிச்சை போன்றவை நடைபெறவில்லை.
டாக்டர்கள் போராட்டத்தால் நேற்று முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துள்ளது அதிர்ச்சி அளித்துள்ளது.
திருவள்ளூர் ஜெய நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி (52). ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக இருந்து வந்தார்.
அவருக்கு சில நாட்களாக காய்ச்சல் இருந்துள்ளது. சிகிச்சை பெறுவதற்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அவரது உடலை பரிசோதித்த டாக்டர் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறும்படி அறிவுறுத்தியதையடுத்து சுப்பிரமணி அனுமதிக்கப்பட்டார். நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக அவர் இறந்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சுப்பிரமணியின் உறவினர்கள் டாக்டர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தேவையான சிகிச்சை அளிக்காததால் தான் சுப்பிரமணி இறந்ததாக கூறினர்.
திருவள்ளூர் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சமாதானப்படுத்தினர். இறந்த ராணுவ வீரருக்கு பத்மாவதி என்ற மனைவியும், மோகன்குமார் என்ற மகனும், நிஷாந்தி என்ற மகளும் உள்ளனர்.
சாதாரண காய்ச்சலால் தான் சுப்பிரமணி பாதிக்கப்பட்டு இருந்தார். நேற்று காலை அவரே மோட்டார் சைக்கிளை ஓட்டியபடி திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பெற சென்றார். அவரது மனைவியும் உடன் சென்று இருந்தார்.
சுப்பிரமணியை பரிசோதித்த டாக்டர்கள் உள் நோயாளியாக சேரும்படி அறிவுறுத்தினர். அவருக்கு உரிய சிகிச்சை அளிக்காததால் நேற்று மதியம் இறந்து விட்டார். டாக்டர்களின் போராட்டம் காரணமாக தேவையான பரிசோதனை, சிகிச்சை அளிக்கப்படவில்லை.
இது தொடர்பான சம்பந்தப்பட்ட டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். போராட்டத்தை காரணம் காட்டி நோயாளிகளின் உயிருடன் டாக்டர்கள் விளையாடக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் 52 டாக்டர்கள் பணி செய்து வருகிறார்கள். அவர்களில் 3 டாக்டர்கள் மட்டுமே நேற்று பணியில் இருந்துள்ளனர். அவர்களும் அவசர சிகிச்சை பிரிவு பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.