மும்பை ஆரே பகுதியில் மெட்ரோ பணிக்காக மரங்களை வெட்ட தடை - சுப்ரீம் கோர்ட் அதிரடி

மும்பை ஆரே பகுதியில் மெட்ரோ ரெயில் நிலைய பணிகளுக்காக மரங்களை வெட்ட மகாராஷ்டிரா அரசுக்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட்
சுப்ரீம் கோர்ட்
Published on

மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தில் பெருகிவரும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு மெட்ரோ ரெயில் வழித்தடங்களுக்கு அம்மாநில அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக மும்பை ஆரே காலனி பகுதியில் மெட்ரொ நிலையத்திற்கான வாகன நிறுத்துமிடம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக ஆரே காலனி வனப்பகுதியில் உள்ள சுமார் 2 ஆயிரத்து 700 மரங்களை வெட்ட மும்பை மாநகராட்சி அனுமதி அளித்தது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சமூக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து மும்பை ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. பல மாதங்கள் நடந்து வந்த இந்த வழக்கை மும்பை ஐகோர்ட்டு நேற்று முன்தினம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதையடுத்து மரங்களை வெட்டும் பணி நள்ளிரவே தொடங்கியது. இதற்காக மரம் வெட்டும் இயந்திரங்கள், புல்டோசர்கள் கொண்டு வரப்பட்டு மரங்கள் வெட்டும் பணிகள் நடைபெற்றது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் போராட்டங்கள் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுவதால் ஆரே காலனி பகுதி முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தொடர்ச்சியாக நூற்றுக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டு வரும் நிலையில் அங்கு அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பான சூழல் நிலவியது.

இவ்விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டை அணுக வேண்டியுள்ளதால் மரங்களை வெட்டும் நடவடிக்கைக்கு தற்காலிகமாக தடை விதிக்க வேண்டும் என சில பசுமை ஆர்வலர்கள் சார்பில் பம்பாய் ஐகோர்ட்டில் புதிதாக மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவின் மீது கடந்த வெள்ளிக்கிழமை விசாரணை நடத்திய ஐகோர்ட் மரங்களை வெட்டும் நடவடிக்கைக்கு தடை விதிக்க மறுத்து விட்டது. மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க முயன்ற சுமார் 30 பசுமை ஆர்வலர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இதற்கிடையே, இவ்விவகாரம் தொடர்பாக தாமே முன்வந்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட் தீர்மானித்துள்ளது. 

இந்நிலையில், தலைமை நீதிபதிகள் அருண் மிஸ்ரா மற்றும் அசோக் பூஷன் தலைமையிலான விடுப்புக்கால சிறப்பு அமர்வு இந்த வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

அப்போது, மும்பை ஆரே பகுதியில் மெட்ரோ ரெயில் நிலைய பணிக்காக மரங்களை வெட்டுவதற்கு கடும் எதிர்ப்பு ட்தெரிவித்த நீதிபதிகள், மேற்கொண்டு மரங்களை வெட்ட தடை விதித்தது.

மேலும், மரம் வெட்ட எதிர்ப்பு தெரிவித்து யாராவது கைது செய்யப்பட்டிருந்தால் அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். இதுவரை எத்தனை மரங்கள் வெட்டப்பட்டு உள்ளன என்பது குறித்த அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அடுத்த கட்ட விசாரணையை 21ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com