

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க் களில் 18 பேர் டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதால் அவர்களை கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் எம்.எல்.ஏ. பதவியில் இருந்து நீக்கி சபாநாயகர் தனபால் நடவடிக்கை எடுத்தார்.
இதனால் காலியான 18 தொகுதிகளில் 16 தொகுதிகளுக்கு கடந்த மாதம் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. மற்ற இரு தொகுதிகளுக்கு வருகிற 19-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இந்தநிலையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ரத்தின சபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய மூவரும் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்கள். சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் அவர்கள் 3 பேரும் டி.டி. வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ததாக கூறப்பட்டது.
இதைத் தொடர்ந்து அவர்கள் 3 பேர் மீதும் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகர் தனபாலிடம் அ.தி.மு.க. கொறடா ராஜேந்திரன் புகார் அளித்தார். அதன் பேரில் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய மூன்று பேருக்கும் சபாநாயகர் தனபால் நோட்டீசு அனுப்பி உள்ளார்.
ஒரு வாரத்துக்குள் மூன்று எம்.எல்.ஏ.க்களும் தங்களது நிலை பற்றி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சபாநாயகர் தனபால் கடந்த செவ்வாய்க்கிழமை அனுப்பி உள்ள நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.
அந்த நோட்டீசு அனுப்பப்பட்ட சில மணி நேரத்துக்குள் சட்டசபை செயலாளரிடம் தி.மு.க. சார்பில் ஒரு மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில், “சபாநாயகருக்கு எதிராக தி.மு.க. நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதாகவும் உடனே அதை எடுத்துக் கொள்ள வேண்டும்” என்றும் கூறப்பட்டிருந்தது.
3 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறிப்பதைத் தடுக்கும் வகையில் தி.மு.க. கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் அமைந்து இருப்பதாக கருதப்படுகிறது.
ஆனால் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு மூவரும் விரைவில் எம்.எல்.ஏ. பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் உறுதியுடன் சொல்கிறார்கள். மூன்று எம்.எல்.ஏ.க்களுக்கும் வழங்கப்பட்டுள்ள நோட்டீசுக்கு அவர்கள் பதில் அளித்ததும் உடனடியாக நடவடிக்கை பாயும் என்று அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் சொல்கிறார்கள்.
ஆனால் அப்படி நடவடிக்கை எடுக்க முடியாது என்று தி.மு.க. தரப்பில் கூறப்படுகிறது. சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு வழங்கப்பட்டுள்ள மனு நிலுவையில் உள்ள நிலையில் எந்த எம்.எல்.ஏ.வையும் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்ய முடியாது என்று தி.மு.க. தலைவர்கள் சொல்கிறார்கள்.
சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர நோட்டீசு கொடுக்கப்பட்டு விட்டாலே சபாநாயகர் தனது அதிகாரத்தை இழந்து விடுகிறார் என்று தி.மு.க.வினர் சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 2016-ம் ஆண்டு வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பை சுட்டிக்காட்டி கூறுகிறார்கள். அருணாசல பிரதேச மாநிலத்தில் சபாநாயகர் அதிகாரம் தொடர்பான இத்தகைய பிரச்சனை எழுந்தபோது, “சபாநாயகர் மீதே நம்பிக்கை இல்லை என்று மனு கொடுக்கப்பட்ட நிலையில் அவர் எம்.எல்.ஏ.க்களை நீக்க அனுமதிக்க இயலாது” என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
தலைமை நீதிபதி கெகர் தலைமையிலான பெஞ்ச் வழங்கிய இந்த தீர்ப்பின் அடிப்படையில் சபாநாயகர் தனபால் செயல்பட வேண்டும் என்று தி.மு.க.வினர் வலியுறுத்தி உள்ளனர். இதனால் 3 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்ய முடியுமா? என்ற சட்ட சிக்கல் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
அ.தி.மு.க. தலைவர்கள் இந்த சட்ட சிக்கலை ஏற்கவில்லை. அ.தி.மு.க. மூத்த தலைவர் பொன்னையன் இது தொடர்பாக கூறியதாவது:-
சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை சட்டசபையில் தான் கொண்டு வர முடியும். அதுவரை சபாநாயகர் தனபால், மூன்று எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் தனக்கு எது சரி என்று படுகிறதோ அதை செய்ய அவருக்கு அதிகாரம் உள்ளது.
மேலும் தி.மு.க.வினர் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கான நோட்டீசு கொடுக்கப்படுவதற்கு முன்பே 3 எம்.எல்.ஏ.க்கள் மீதான நடவடிக்கையை சபாநாயகர் தொடங்கி விட்டார். எனவே 3 எம்.எல்.ஏ.க்கள் விஷயத்தில் சபாநாயகர் எந்த முடிவும் எடுக்க எந்த தடையும் இல்லை.
இவ்வாறு பொன்னையன் கூறினார்.
இந்த விவகாரத்தில் சட்ட நிபுணர்கள் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்துள்ளனர். சில சட்ட நிபுணர்கள் கூறுகையில், “சபாநாயகருக்கு எல்லா அதிகாரங்களும் இருந்தாலும், அவர் எந்த ஒரு எம்.எல்.ஏ.வையும் தகுதி நீக்கம் செய்யும் முன்பு தன் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்கொள்ள வேண்டும். அதுதான் சட்ட நடைமுறை” என்கிறார்கள்.
மூத்த வழக்கறிஞர் கே.எம். விஜயன் இதுபற்றி கூறுகையில், “சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2016-ம் ஆண்டு சபாநாயகர் அதிகாரம் தொடர்பாக வழங்கிய தீர்ப்பில் சபாநாயகர் முதலில் தன் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொண்ட பிறகே எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளது என்று மிக தெளிவாக கூறி உள்ளது. எனவே சபாநாயகர் மீது தி.மு.க. நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு நோட்டீசு கொடுக்கப்பட்டு இருப்பதால் அவரால் 3 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க இயலாது” என்றார்.
மூத்த வக்கீல் வில்சன் கூறுகையில், “சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ் வழங்கப்பட்டு இருப்பதால் அது சட்டசபையில் எடுத்துக் கொள்ளப்படும் வரை சபாநாயகர் காத்திருக்க வேண்டும். அதன் பிறகே சபாநாயகர் செயல்பட முடியும். சுப்ரீம் கோர்ட்டு இதை மிக தெளிவாக தனது தீர்ப்பில் கூறி இருக்கிறது” என்றார்.