

சென்னை மாநகரை ‘இசை படைப்பாற்றல் மிக்க நகரம்’ என யுனெஸ்கோ அங்கீகரித்ததை கொண்டாடும் வகையில் சென்னை அரசு அருங்காட்சியகம் சார்பில் இசை, நடன கலை தொடர்பான சிறப்பு கண்காட்சி மற்றும் விழா ‘இயல் இசை மியூசியம்’ எனும் தலைப்பில் எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியக வளாகத்தில் நேற்று தொடங்கியது.
அமைச்சர் க.பாண்டியராஜன் தலைமை தாங்கினார். அருங்காட்சியகங்கள் துறை இயக்குனர் கவிதா ராமு முன்னிலை வகித்தார். விழாவில் தகவல் தொழில்நுட்பத்துறை முதன்மை செயலாளர் டி.கே.ராமச்சந்திரன், தமிழ்நாடு இயல், இசை, நாடக பல்கலைக்கழக துணைவேந்தர் பிரமிளா குருமூர்த்தி உள்பட பலரும் பங்கேற்றனர்.
விழாவில் அமைச்சர் பாண்டியராஜன் பேசியதாவது:-
சென்னை மாநகருக்கு இசை நகரம் என யுனெஸ்கோ கொடுத்த சான்றிதழ், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா நமக்கு தந்த கொடையாகும். சமீபத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட 7 ஆயிரம் கல் ஆயுதங்கள் சுமார் 3¾ லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்டது என்பது ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
உலகத்தின் முதல் மனிதன் எனப்படும் ஹோமோ செப்பியன்ஸ் காலமே ஒரு லட்சம் ஆண்டுகள் தான். ஆனால் மனித நாகரிகத்துக்கு முன்பே ஆதாரம் சொல்லும் இந்த ஆய்வு முடிவு வியப்பாக உள்ளது. கீழடியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வு காரணமாக மொகஞ்சதாரோ, ஹரப்பா நாகரிகங்களை மிஞ்சிய, உன்னதமான நகர்ப்புற நாகரிகம் இருந்தது வெளிச்சத்துக்கு வந்தது.
எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் உள்ள தேசிய கலை அருங்காட்சியகம் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட உள்ளது. முன்பு இருந்தது போல இங்கு மீண்டும் ஒரு ஏரியை உருவாக்கி, பழமையான சிலைகளையும் வைக்க இருக்கிறோம்.
எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் உள்ள கலைப்பொருட்களை மாணவிகள் பார்வையிட்ட காட்சி
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் அமைச்சர் பாண்டியராஜனிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- எழும்பூர் அருங்காட்சியகத்தில் மேற்கொள்ளும் திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட உள்ளது?
பதில்:- மத்திய, மாநில மற்றும் தனியார் நிறுவனங்களின் கூட்டு முயற்சியின் அடிப்படையில் ரூ.128 கோடியில் உலகத்தர முயற்சிகளை மேற்கொள்ள உள்ளோம்.
கேள்வி:- ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு போதுமான நிதி வந்துவிட்டதா? எந்தெந்த அரசியல் கட்சிகள் நிதி அளித்திருக்கின்றன?
பதில்:- உரிய அறிவிப்புகள் விரைவில் வெளியிடுவோம். இந்த சூழ்நிலையில் நிதி வழங்கியோரை தனித்தனியாக கூறுவது முறையாகாது.
கேள்வி:- தி.மு.க. சார்பில் வழங்கிய ரூ.1 கோடி வந்து சேர்ந்ததா?
பதில்:- அந்த நிதி இன்னும் வந்து சேரவில்லை. அதை விரைவில் கொடுத்தால் மகிழ்ச்சி அடைவோம். தமிழ் இருக்கை அமைய நிதியை ஒரு அரசியல் கட்சியாக வழங்கலாமா? என்று தி.மு.க. சார்பில் ஹார்வர்டு பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கேட்டிருப்பதாகவும், அவர்களின் பதிலுக்காக காத்திருப்பதாகவும் தி.மு.க. சார்பில் ஆறுமுக முருகையா தெரிவித்தார். எங்களிடம் வழங்க தயக்கமாக இருந்தால் அண்ணா உருவாக்கிய தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் மூலம் அந்த நிதியை வழங்கலாம். அதில் எந்த சங்கடமும் இருக்காது. எனவே ஹார்வர்டு பல்கலைக்கழக நிர்வாக பதிலை எதிர்பார்க்காமல் அந்த நிதியை விரைவில் வழங்கினால் மிகவும் மகிழ்ச்சி.