

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 19-ந்தேதி நடக்கிறது. இத்தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க., உள்ளிட்ட கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். நாம் தமிழர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளனர். இதன் காரணமாக அரவக்குறிச்சி தேர்தலில் 5 முனை போட்டி நிலவுகிறது.
தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முன்னதாகவே அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரசாரத்தையும் தொடங்கினார். அ.தி.மு.க., அ.ம.மு.க. சார்பிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் இன்னும் 2, 3 நாட்களில் பிரசாரத்தை தொடங்க உள்ளனர். இதன் காரணமாக அரவக்குறிச்சி தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.
இத்தொகுதிக்கான வேட்பு மனுதாக்கல் நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில், சுயேட்சை வேட்பாளர்கள் 3 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்தநிலையில் இன்று காலை தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி, அரவக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி மீனாட்சியிடம் மனு தாக்கல் செய்தார்.