ஆர்.கே.நகரில் 154 நிர்வாகிகள் கட்சி பதவி பறிப்பு: தி.மு.க. தலைமை நடவடிக்கை

ஆர்.கே நகரில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து தேர்தல் பணியாற்ற தவறிய 154 நிர்வாகிகள் நீக்கப்பட்டுள்ளதாகவும், 14 வட்டக்குழுக்களை கலைத்து தி.மு.க தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆர்.கே.நகரில் 154 நிர்வாகிகள் கட்சி பதவி பறிப்பு: தி.மு.க. தலைமை நடவடிக்கை
Published on

ராயபுரம்:

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. படுதோல்வியை சந்தித்ததுடன் டெபாசிட் தொகையையும் இழந்தது. இது தி.மு.க. தொண்டர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து ஆர்.கே. நகரில் தி.மு.க. நிர்வாகிகளின் தேர்தல் பணிகள் குறித்து விசாரித்து கட்சித் தலைமைக்கு அறிக்கை அளிக்க கட்சியின் சட்டப்பேரவை கொறடா சக்கரபாணி, சட்டப்பிரிவு செயலாளர் கிரிராஜன், சட்டப் பிரிவு துணை செயலாளர் கண்ணதாசன் ஆகியோரை கொண்ட குழு அமைக்கப்பட்டது.

அந்த குழுவினர் ஆர்.கே.நகர் தொகுதியில் 6 நாட்களாக விசாரணை நடத்தினார்கள். பின்னர் விசாரணை அறிக்கையை நேற்று காலை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்கள்.

அதில் கூட்டணி கட்சிகள் வெளியூர்களில் இருந்து வந்திருந்த நிர்வாகிகள், தொண்டர்களை ஒருங்கிணைத்து வாக்குச்சாவடி அளவில் தேர்தல் பணிகளை செய்ய ஆர்.கே.நகர் பகுதி நிர்வாகிகள் தவறி விட்டதாக கூறப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில் ஆர்.கே.நகரில் தி.மு.க. அமைப்புகள் முழுவதுமாக கலைக்கப்பட்டுள்ளன. 154 நிர்வாகிகளின் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.

ஆர்.கே.நகர் தொகுதி ஆர்.கே.நகர் மேற்கு மற்றும் ஆர்.கே.நகர் கிழக்கு என 2 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. கிழக்கு பகுதி செயலாளராக மருது கணேசும், மேற்கு பகுதி செயலாளராக ஏ.பி.மணியும் உள்ளனர். இந்த 2 பகுதிகளும் 14 வட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒரு வட்டத்துக்கு ஒரு அவைத் தலைவர், ஒரு வட்ட செயலாளர், 3 வட்ட துணை செயலாளர்கள், ஒரு பொருளாளர், 5 பகுதி பிரதிநிதிகள் என 11 நிர்வாகிகள் உள்ளனர்.

இதேபோல் 14 வட்டத்துக்கும் மொத்தம் 154 நிர்வாகிகள் உள்ளனர். இந்த 154 நிர்வாகிகளின் கட்சிப் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை தி.மு.க. தலைமை எடுத்துள்ளது.

மருதுகணேஷ், ஏ.பி.மணி ஆகிய இருவர் மட்டுமே தங்களின் கட்சிப் பதவியில் நீடிக்கிறார்கள்.

#TamilNews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com