தே.மு.தி.க. சார்பில் ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்- ஈரோடு தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அறிக்கை

விஜயகாந்த் பிறந்தநாள் விழா நாளை சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. தே.மு.தி.க. சார்பில் ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதாக ஈரோடு தெற்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆனந்த் தெரிவித்துள்ளார்.
எஸ்.ஆனந்த்
எஸ்.ஆனந்த்
Published on

ஈரோடு:

ஈரோடு தெற்கு மாவட்ட தே.மு.தி.க. பொறுப்பாளர் எஸ்.ஆனந்த் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:-

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் விழா 25-ந் தேதி (நாளை) சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. விழாவையொட்டி காலை 6 மணிக்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் கட்சியின் கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து ஈரோடு அருகே லக்காபுரம் செண்பகமலை முருகன் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. பின்னர் செங்கோடம்பள்ளத்தில் உள்ள கொங்கு மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் காப்பகத்தில் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. கே.கே.நகர் கருணை இல்லத்தில் உள்ள முதியவர்களுக்கு மதிய உணவும், ஏழை மக்களுக்கு அரிசி, மளிகை பொருட்களும் வழங்கப்பட உள்ளது.

இதேபோல் தெற்கு மாவட்டத்துக்கு உள்பட்ட ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி பகுதிகளில் கிளை, வட்டம் வாரியாக கொடியேற்று விழா நடக்கிறது. இதில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. கட்சியின் தலைவர் விஜயகாந்த் உத்தரவை ஏற்று, கிராம சுகாதார திட்டத்தின் படி கிராமங்களில் கிருமி நாசினி தெளித்து பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கப்பட உள்ளது. மேலும், சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது. “இல்லாதவர்களுக்கு இயன்றதை செய்வோம்” என்ற விஜயகாந்த் கொள்கைக்கு ஏற்ப கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆனந்த் கூறிஉள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com