10-ம் வகுப்பு மாணவன் கண்மாயில் மூழ்கி பலி

விருதுநகர் அருகே 10-ம் வகுப்பு மாணவன் கண்மாயில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.எம்.ரெட்டியபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பலியான மாணவன் சுபபிரியன்
பலியான மாணவன் சுபபிரியன்
Published on

திருச்சுழி

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள புங்கமரத்துப்பட்டியை சேர்ந்த விவசாயி வேல்சாமி. இவரது மனைவி செல்வி. இவர்களது மகன் சுபபிரியன் (வயது14).

இவன் சூரப்ப நாயக்கன்பட்டியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். பொதுத்தேர்வு எழுதியிருந்த சுபபிரியன் தேர்வு முடிவுக்காக காத்திருந்தான்.

இந்தநிலையில் பள்ளி விடுமுறையை முன்னிட்டு புங்கமரத்துப்பட்டியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்திருந்த சுபபிரியன், நேற்று அங்குள்ள கண்மாய்க்கு குளிக்க சென்றதாக தெரிகிறது. அங்கு தண்ணீரில் இறங்கிய அவர் ஆழமான பகுதியில் சிக்கினான்.

அங்கிருந்து வெளியேற முடியாமல் சுபபிரியன் தண்ணீரில் மூழ்கினான். இதுகுறித்து தகவலறிந்த எம்.ரெட்டியபட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கண்மாயில் மாணவனை தேடினர். சில மணி நேரத்திற்கு பிறகு மாணவன் பிணமாக மீட்கப்பட்டான்.

மாணவரின் உடலை பார்த்து அவரது பெற்றோர், குடும்பத்தினர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இதைத்தொடர்ந்து மாணவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

கண்மாயில் மூழ்கி மாணவன் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com