

திருச்சி,
பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் நம்பெருமாள் வசந்த உற்சவம் 9 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறும். இந்தாண்டிற்கான நம்பெருமாள் வசந்த உற்சவம் கடந்த 28-ந்தேதி தொடங்கியது. வசந்த உற்சவ நாட்களில் தினமும் மாலை 5 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு வசந்த மண்டபத்திற்கு மாலை 6 மணிக்கு வந்து சேர்வார். அங்கு அலங்காரம், அமுது செய்து சூர்ணாபிஷேகம் கண்டருளுவார்.
பின்னர் வசந்த மண்டபத்திலிருந்து இரவு புறப்பட்டு மூலஸ்தானம் சென்றடைவார். வசந்தஉற்சவத்தின் 7-ம் நாளான 2-ந்தேதி நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் கோவில் கொட்டாரத்தில் நெல்லளவு கண்டருளினார். விழாவின் நிறைவு நாளான நேற்று நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து தங்ககுதிரை வாகனத்தில் மாலை 5 மணிக்கு புறப்பட்டார். தொடர்ந்து சித்திரை வீதிகளில் வலம் வந்து இரவு 7 மணிக்கு சந்திரபுஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளினார்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 7.45 மணிக்கு வசந்த மண்டபத்தை சென்றடைந்தார். அங்கு இரவு 8.30 மணி முதல் இரவு 10.30 மணிவரை திருமஞ்சனம் கண்டருளினார். நம்பெருமாள் வசந்த மண்டபத்திலிருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு படிப்பு கண்டருளி இரவு 12 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.