

செய்துங்கநல்லூர்:
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சிவகளை பரம்பு பகுதியில் தமிழக தொல்லியல் துறை சார்பில் கடந்த 2 வருடங்களாக தொல்லியல் அகழாய்வு பணிகள் நடந்து வந்தது. இந்த அகழாய்வு பணியில் ஏராளமான பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் தமிழரின் வரலாறை நிரூபிக்கும் வண்ணம் சிவகளையில் ஒரு முதுமக்கள் தாழியில் இருந்து எடுத்த நெல்மணிகள் மூலம் 3200 ஆண்டுகள் பழமையானது நமது தமிழரின் நாகரிகம் என்று சட்டமன்ற கூட்டத்தொடரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மேலும் இந்த ஆண்டும் இந்த சிவகளையில் தொல்லியல் அகழாய்வு பணிகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகளை தொல்லியல் களத்தில் பல்வேறு கல்லூரி மற்றும் பள்ளி மாணவ- மாணவிகள் பார்வையிட்டு வருகின்றனர். இந்த நிலையில் சென்னை பல்கலைக்கழக தொல்லியல் துறை மாணவ- மாணவிகள் சிவகளை தொல்லியல் களத்தினை பார்வையிட வருகை தந்தனர்.
அவர்கள் கடந்த இரண்டு முறை அகழாய்வு பணிகள் நடந்த இடத்தையும், இந்தாண்டு அகழாய்வு பணிகள் நடைபெற உள்ள இடத்தையும் பார்வையிட்டனர்.
இதில் இன்பெண்டா, சாரு, அதிதி, ஆலன் மேக்ஸ்வெல், ஆனந்த், விக்னேஷ், ஸ்ரீதர், விஜயகுமார் உள்பட பலர் வந்திருந்தனர். இவர்களுக்கு ஆசிரியர் மாணிக்கம் அகழாய்வு பணிகள் குறித்து விளக்கி கூறினார்.