

தூத்துக்குடி:
தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கி உள்ள நிலையில் தடுப்பூசி போடும் பணியை அரசு தீவிரப்படுத்தி உள்ளது.
வழக்கமாக வாரந்தோறும் ஞாயிற்றுகிழமைகளில் நடத்தப்படும் தடுப்பூசி முகாம்கள் நாளை முழு ஊரடங்கு காரண மாக இன்று நடத்தப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 18-வது கட்ட தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதற்காக மாநகராட்சி பகுதியில் 94 மையங்கள் அமைக்கப் பட்டிருந்தது.
மேலும் ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம், தூத்துக்குடி, ஆழ்வார்திருநகரி, கருங்குளம், கோவில்பட்டி, கயத்தாறு, ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட இடங்களில் மொத்தம் 722 மையங்கள் அமைக்பபட்டிருந்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் வரை மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருந்த கொரோனா தொற்று தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு 40 ஆக இருந்த தொற்று நேற்று 160 ஆக அதிகரித்தது. தற்போது அரசு மருத்துவமனை மற்றும் வீடுகளில் 213 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அதில் 5 பேருக்கு மட்டுமே ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதனால் இன்று காலை முதலே ஏராளமானவர்கள் தடுப்பூசி போட திரண்டனர். தற்போது கட்டுப்பாடுகள் காரணமாக கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் இன்று நடைபெற்ற முகாம்களில் கல்லூரி மாணவர்கள் அதிகமானவர்கள் ஆர்வமுடன் திரண்டனர்.
மாநகராட்சி நிர்வாகம் சார்பில் 2&வது தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள் கணக்கெடுக்கப்பட்டு அவர்களுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.