

தென்காசி மாவட்டம் குற்றாலம் போலீஸ் நிலையம் அருகே பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சுற்றுலா மாளிகை உள்ளது.
இந்த மாளிகையின் பின்புறம் உள்ள காட்டுப்பகுதியில் நேற்று சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்தார். இதனை கண்டவர்கள் குற்றாலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஜோஸ் தலைமையிலான போலீசார் அந்த பெண்ணை மீட்டனர்.
அவரது வாயில் துணி வைக்கப்பட்டு இருந்தது. மயங்கிய நிலையில் இருந்த அவரது உடலில் காயங்களும் இருந்தது.உடனே அவரை தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அந்த பெண்ணை அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து அந்த பெண் யார்? யாரேனும் அவரை அடித்து கொலை செய்யும் நோக்கில் கடத்தி வந்து காட்டுப்பகுதியில் வீசினார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தினர்.
போலீசார் மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட பெண் யார் என்று அடையாளம் கண்டுபிடித்தனர். அச்சன்புதூர் அருகே உள்ள நெடுவயல் உத்தமி அம்மன் கோவிலை சேர்ந்தவர் ஆறுமுகசாமி என்பவரது மனைவி செல்லப்பொண்ணு(வயது 41) தான் என்பது விசாரணையில் தெரியவந்தது.
ஆறுமுகசாமி திருப்பூரில் ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். செல்லப்பொண்ணு பீடி சுற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
கடந்த 13-ந்தேதி செல்லப்பொண்ணு ஒரு திருமண வீட்டிற்கு சென்று வருவதாக கூறி சென்றார். ஆனால் அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதுதொடர்பாக அவரது கணவர் அச்சன்புதூர் போலீசில் புகார் அளித்திருந்தார்.
இந்தநிலையில் தான் அவர் குற்றாலத்தில் காட்டுப் பகுதியில் காயங்களுடன் மீட்கப் பட்டுள்ளார். அவருக்கு இன்னும் மயக்கம் தெளியவில்லை. அதன்பின்னரே அவரை யார் அடித்து காட்டுப்பகுதியில் வீசினார்கள் என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
அதே நேரத்தில் அந்த பெண்ணை கடத்தி சென்று கொலை செய்ய முயன்றவர்கள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.