சமூக பொருளாதார நிலை குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்- வானதி சீனிவாசன்

பா.ஜ.க.வைப் பொறுத்தவரை ’எல்லோருக்கும் எல்லாம்’ என்ற ’சம நீதி’ கொள்கையை தான் பின்பற்றி வருகிறது. பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை பா.ஜ.க. எப்போதுமே ஆதரித்து வந்துள்ளது.
சமூக பொருளாதார நிலை குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்- வானதி சீனிவாசன்
Published on

கோவை:

பா.ஜ.க. மகளிரணி தேசிய தலைவரும், எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டால், பிராமணர் சமுதாயம் மட்டுமே பயன்பெறுகிறது என்ற நச்சு பிரசாரத்தை, ஹிட்லர் யூதர்களிடம் காட்டியது போன்ற வெறுப்புணர்வை தனது பேட்டியின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார் ஆர்.எஸ்.பாரதி.

பட்டியலின, பழங்குடியின, இதர பிற்படுத்தப்பட்டோர் என இடஒதுக்கீட்டு வரம்புக்குள் வராத அனைத்து ஜாதியினரும், இந்த 10 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் பலன் பெற முடியும்.

தமிழகத்தில் எஸ்.சி., எஸ்.டி., பிற்படுத்தப்பட்டோர் (பி.சி.) மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (எம்.பி.சி.), எஸ்.சி. (அருந்ததியர்), பி.சி. (முஸ்லிம்) என 69 சதவீத இடஒதுக்கீடு உள்ளது. இந்த வரம்புக்குள் வராத சமூகம், பிராமணர் சமூகம் மட்டும்தான் என்று ஆர்.எஸ்.பாரதி கூறுகிறாரா? வேளாளர், முதலியார், செட்டியார், ரெட்டியார், நாயுடு என 60-க்கும் அதிகமான ஜாதிகளுக்கு இட ஒதுக்கீடு இல்லை. இதனை ஆர்.எஸ். பாரதி மறுக்கிறாரா? அல்லது இந்த சமூகங்களுக்கு எல்லாம் இட ஒதுக்கீடு தேவையில்லை. இந்த சமூகங்களில் ஏழைகளே இல்லை, அவர்களெல்லாம் பணக்காரர்கள் என்று கூற வருகிறாரா? என்பதை அவர் விளக்க வேண்டும்.

பா.ஜ.க.வைப் பொறுத்தவரை 'எல்லோருக்கும் எல்லாம்' என்ற 'சம நீதி' கொள்கையை தான் பின்பற்றி வருகிறது. பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை பா.ஜ.க. எப்போதுமே ஆதரித்து வந்துள்ளது. மக்கள் தொகைக்கு ஏற்ப பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு சதவீதத்தை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. அதனை செயல்படுத்தியும் வருகிறது.

தமிழகத்தில் இட ஒதுக்கீட்டு வரம்புக்குள் வருகிற சமூகங்கள் எவை என்பது அனைவருக்கும் தெரியும். 69 சதவீத இட ஒதுக்கீட்டு வரம்புக்குள் வராத சமூகங்கள் எவ்வளவு என்பது பற்றியும், அவர்களில், உயர் கல்வி பெற்றோர் எத்தனை சதவீதம்? அரசு வேலைவாய்ப்பு பெற்றோர் எத்தனை சதவீதம்? என்பது பற்றிய புள்ளி விவரங்களை தமிழக அரசு வெளியிட வேண்டும்.

தமிழகத்தில் இட ஒதுக்கீடு கிடைக்காத சமூகங்களின் சமூக பொருளாதார நிலை குறித்தும், அவர்களில் உயர் கல்வி பெற்றோர் எத்தனை சதவீதம், அரசு வேலைவாய்ப்பு பெற்றோர் எத்தனை சதவீதம் என்பது பற்றிய வெள்ளை அறிக்கையை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும்.

தங்கள் அரசியல் ஆதாயத்திற்காக, பிராமண வெறுப்புணர்வை விடாமல் வளர்த்து வரும் தி.மு.க., அதற்காக இட ஒதுக்கீடு வரம்புக்குள் வராத 60-க்கும் அதிகமான மற்ற சமூகங்களையும் சேர்த்து பலியிட்டு விட வேண்டாம்.

1949-ல் தொடங்கப்பட்ட தி.மு.க.வின் தலைமை பொறுப்புக்கு இதுவரை ஒரு பெண்மணியோ, அல்லது பட்டியலினத்தை சேர்ந்த ஒருவரோ வர முடியவில்லை. இனியும் வருவதற்கான அறிகுறியும் இல்லை. இதுதான் சமூக நீதியா என்பதையும் தி.மு.க.வினர் சிந்தித்துப் பார்க்க வேண்டுகிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com