ஜெயலலிதாவின் இல்லத்தை கையகப்படுத்தும் நடவடிக்கையை கைவிடுகிறோம்- சிவில் கோர்ட்டில் அரசு மனுத்தாக்கல்

சென்னை வருவாய் கோட்டாட்சியர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை வரும் 18ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேதா இல்லம்
வேதா இல்லம்
Published on

சென்னை:

அ.தி.மு.க. ஆட்சியின் போது ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றி உத்தரவு பிறப்பித்தது. இதற்கு ஏதுவாக சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் தமிழக அரசு ரூ. 68 கோடி டெபாசிட் செய்துள்ளது.

24 ஆயிரத்து 322 சதுர அடி பரப்பு கொண்ட வேதா இல்லத்திற்கு இழப்பீட்டுத் தொகையைத் தமிழக அரசு செலுத்தியுள்ளது. ஜெயலலிதாவின் வருமான வரி பாக்கி ரூ.36.9 கோடியும் செலுத்தப்பட்டுள்ளது.

மனுக்களை விசாரித்த நீதிபதி, அரசின் இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று தீபா, தீபக் மற்றும் வருமான வரித்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இந்த நிலையில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்தோட்டத்தில் உள்ள வேதா இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்றுவதை எதிர்த்த சட்டபூர்வ வாரிசுகளான தீபக், தீபா தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு தனி நீதிபதி சே‌ஷசாயி, கையகப்படுத்தி அ.தி.மு.க. அரசு பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்து, கடந்த ஆண்டு நவம்பர் 24-ந்தேதி தீர்ப்பளித்திருந்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா நினைவு இல்ல அறக்கட்டளை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் சார்பில் மூன்றாம் நபர் மேல்முறையீட்டு மனுவை, சென்னை ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்ச் தாக்கல் செய்தது.

இந்த நிலையில் சென்னை 6-வது கூடுதல் சிவில் கோர்ட்டில் உள்ள வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் சென்னை வருவாய் கோட்டாட்சியர் சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் வேதா இல்லத்தை விலைக்கு வாங்க ஏதுவாக ரூ.68 கோடி டெபாசிட் செய்த தொகையை திரும்ப பெறுவதாகவும், கையகப்படுத்தும் நடவடிக்கையை கைவிடுவதாகவும் கூறப்பட்டு இருந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி, வருமானவரித்துறையின் சார்பில் சில விளக்கங்கள் தேவைப்படுவதால் விசாரணையை வரும் 18-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறேன் என்று உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com