நெல்லையில் கொள்ளையர்கள் 3 பேர் கைது

நெல்லையில் கொள்ளையர்கள் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

நெல்லை:

நெல்லை மாநகரில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மோட்டார் சைக்கிள் திருட்டு நடைபெறுவதாக மாநகர குற்றப்பிரிவு போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.

இதையடுத்து தனிப்படை போலீசார் மோட்டார் சைக்கிள் திருடர்களை தீவிரமாக கண்காணித்து தேடி வந்தனர். இதனிடையே டவுனில் நடந்த மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பந்தமாக அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராக்களை ஆய்வு செய்தபோது அதில் மோட்டார் சைக்கிள் திருடிய நபர்கள் குறித்து வீடியோ தெளிவாக பதிவாகி இருந்தது. அந்தக் காட்சிகளை கொண்டு நடத்திய விசாரணையில் பேட்டை கக்கன் நகர் பகுதியை சேர்ந்த சுடலை மணி (வயது 20), மகாராஜா (21), முத்துராஜ் ஆகியோர் மோட்டார் சைக்கிளை திருடியது என்பது தெரியவந்தது. அவர்களை தனிப்படை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல் மூலம் அவர்களிடமிருந்து 10 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவை அனைத்தும் மேலப்பாளையம், டவுன், ஐகிரவுண்டு, புதிய பஸ் நிலையம் பகுதிகளில் திருடியதும் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் போலீசார் தொடர்ந்து அவர்களிடம் வேறு ஏதேனும் திருட்டு சம்பவங்களில் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com