பள்ளிக்கூட கழிப்பறையை மாணவர்கள் சுத்தம் செய்த சம்பவம்- 2 பேர் பணி இடைநீக்கம்

பள்ளிக்கூட கழிப்பறையை மாணவர்கள் சுத்தம் செய்த சம்பவம் தொடர்பாக தலைமை ஆசிரியை உள்பட 2 பேரை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமகிருஷ்ணன் நடவடிக்கை எடுத்தார்.
பள்ளிக்கூட கழிப்பறையை சுத்தம் செய்யும் மாணவர்கள்
பள்ளிக்கூட கழிப்பறையை சுத்தம் செய்யும் மாணவர்கள்
Published on

ஈரோடு:

பள்ளிக்கூட கழிப்பறையை மாணவர்கள் சுத்தம் செய்த சம்பவம் தொடர்பாக  தலைமை ஆசிரியை உள்பட 2 பேரை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமகிருஷ்ணன் நடவடிக்கை எடுத்தார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே முள்ளம்பட்டியில் அரசு தொடக்க பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது. அங்கு 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளிக்கூடத்தில் உள்ள கழிப்பறையை ஒரு மாணவன் மற்றும் ஒரு சிறுமி சுத்தம் செய்வது போன்ற ஒரு வீடியோ கடந்த சில நாட்களுக்கு முன்பு இணையதளத்தில் வெளியாகி பரவியது.

இந்த வீடியோவை பார்த்த பல்வேறு அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பள்ளிக்கூட கழிப்பறையை மாணவர்கள் மூலமாக சுத்தம் செய்ய வைத்த சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இதுதொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த கல்வித்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமகிருஷ்ணன் உத்தரவிட்டு இருந்தார். அவருடைய உத்தரவின்பேரில் பெருந்துறை கல்வி மாவட்ட அதிகாரி அமுதா சம்பந்தப்பட்ட பள்ளிக்கூடத்துக்கு சென்று தலைமை ஆசிரியை, ஆசிரிய-ஆசிரியைகள், மாணவர்களிடம் விசாரணை நடத்தினார்.

விசாரணையின் முடிவில், அதன் அறிக்கையை அவர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியிடம் சமர்ப்பித்தார். இதையடுத்து பள்ளிக்கூட தலைமை ஆசிரியை மைதிலி, ஆசிரியை சுதா ஆகியோரை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமகிருஷ்ணன் உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com