

அன்னதானப்பட்டி:
சேலம் நெத்திமேடு புத்தூர் இட்டேரி ரோடு பகுதியில் தனியார் நிறுவனத்தின் மளிகை பொருட்கள் மொத்த குடோன் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து மளிகை சாமான்கள் புக்கிங் ஆர்டர் செய்யும் கடைகளுக்கு பொருட்கள் மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் டெலிவரி செய்யப்படுவது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று (திங்கட்கிழமை) காலை ஊழியர்கள் குடோனை திறந்த போது கல்லாப் பெட்டி உடைக்கப்பட்டு பொருட்கள், பணம் ஆங்காங்கே சிதறிக் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அங்கு அந்த கல்லா பெட்டியில் வைத்திருந்த பொருட்கள் வசூல் பணம் சுமார் ரூ.6.50 லட்சம் மர்ம நபர்களால் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இது குறித்த தகவலின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் அங்கு சென்று திருட்டு சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவத்தின்போது பூட்டை உடைத்து, கடப்பாரையால் குத்தி சுவற்றில் துளையிட்டு ஓட்டை போட்டதற்கான எந்த அறிகுறிகளும் அங்கு தென்படவில்லை. எனவே நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்கள், மேலாளர்கள் யாராவது பணத்தை திருடி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தினர்.
சூரமங்கலம் தர்ம நகர் பகுதியைச் சேர்ந்த மேலாளர் தனசேகரன் (வயது32) என்பவரிடம் குடோன் சாவி இருந்தது. அவர் தான் வழக்கமாக வேலை முடிந்து குடோனை பூட்டி விட்டு செல்வார். இதனால் அவர் மீதான சந்தேகம் வலுத்தது.
இதையடுத்து அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். போலீசாரின் தொடர் விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். தொடர்ந்து தீவிர விசாரணையில் வேலை செய்த இடத்திலேயே பணத்தை திருடியதை தனசேகரன் ஒப்புக் கொண்டார். மேலும் அந்த பணத்தை ஓமலூரில் உள்ள தனது நண்பர் ஒருவரின் வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாரிடம் தெரிவித்தார்.
இதையடுத்து அங்கு சென்று அப்பணத்தை போலீசார் மீட்டனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தனசேகரனை கைது செய்தனர். போலீசார் தொடர் விசாரணையில் தனசேகரன் தனது வேலையில் போதிய வருமானமின்றி தவித்து வந்ததாகவும், குடும்ப கஷ்டத்திற்கு செலவுக்கு பணம் தேவைப்பட்டதால் திருடியதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் நீண்ட நாட்கள் காத்திருந்து சமயம் பார்த்து திருடியதாகவும், அவர் போலீசாரிடம் தெரிவித்தார். இது குறித்து தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் அங்கு வேலை செய்து வரும் மற்ற ஊழியர்களுக்கும் இந்த திருட்டு சம்பவத்தில் அவருடன் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.