10 ஆயிரம் என்ஜினீயரிங் மாணவர்களின் விடைத்தாள்களும் திருத்தப்படும்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

‘தாமதமாக பதிவேற்றம் செய்த மாணவர்களின் விடைத்தாள்களும் திருத்தம் செய்யப்படும்’ என்று அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
அமைச்சர் பொன்முடி
அமைச்சர் பொன்முடி
Published on

சென்னை:

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்துவதில் கொரோனா காரணமாக தடங்கல் ஏற்பட் டது.

இதையடுத்து வழக்கமாக கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் நடத்தப்பட வேண்டிய தேர்வு தள்ளி வைக்கப்பட்டது. பின்னர் பிப்ரவரி மாதம் ஆன்-லைன் மூலம் தேர்வு நடத்தப்பட்டது. இதன்படி கல்லூரிகளுக்கு வினாத்தாள்கள் அனுப்பி வைக்கப்பட்டது. கூகுள் கிளாஸ் ரூம் ஆப் மூலம் மாணவர்கள் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டது.

காலை 9 மணிக்கு கல்லூரிகள் மூலம் வினாத்தாள்கள் வெளியிடப்பட்டது. அதை பார்த்து மாணவர்கள் வீட்டில் இருந்த படியே தேர்வு எழுதினார்கள்.

தேர்வு எழுதிய விடைத்தாள்கள் அனைத்தையும் ஸ்கேன் செய்து தேர்வு நேரம் முடிந்த 30 நிமிடங்களுக்குள் பதிவேற்றம் செய்து அனுப்ப வேண்டும். பின்னர் அந்த விடைத்தாள்களை அதே நாள் மாலை 5 மணிக்குள் தூதஞ்சல் மூலம் கொரியர் அனுப்ப வேண்டும்.

அந்த விடைத்தாள்களை கல்லூரிகள் சேகரித்து அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைத்தன. அந்த விடைத்தாள்கள் குறிப்பிட்ட காலகெடுவுக்குள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா? அனுப்பி வைக்கப்பட்டுள்ளதா? என்பதை ஆய்வு செய்து அந்த விடைத்தாள்கள் திருத்தப்பட்டன.

இதில் சுமார் 10 ஆயிரம் மாணவர்கள் குறிப்பிட்ட காலகெடுவுக்குள் விடைத்தாள்களை பதிவேற்றம் செய்யவில்லை என்பது தெரிய வந்தது. அந்த விடைத்தாள்களை திருத்தும் பணியை நிறுத்தி வைத்தனர்.

அந்த மாணவர்களை ஆப்சென்டாக கணக்கிட முடிவு செய்தனர். எனவே அவர்கள் அனைவரும் தேர்வில் தோல்வி அடையும் அபாய நிலை ஏற்பட்டது.

இதுபற்றி அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘பிப்ரவரி 1 முதல் 12-ந்தேதி வரை நடந்த ஆன்லைன் தேர்வில் பங்கேற்று விடைத்தாள்களை பதிவேற்றம் செய்யாதவர்கள் ஆப்சென்ட் ஆக்கப்பட்டுள்ளனர் என கூறினார்.

அண்ணா பல்கலைக் கழகத்தின் இந்த நடவடிக்கை மாணவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தகவல் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதையடுத்து ‘தாமதமாக பதிவேற்றம் செய்த மாணவர்களின் விடைத்தாள்களும் திருத்தம் செய்யப்படும்’ என்று அமைச்சர் பொன்முடி அறிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com