தருமபுரி மாவட்டத்தில் 10 பேரூராட்சிகளிலும் தலைவர் பதவியில் தி.மு.க. வெற்றி

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 10 பேரூராட்சிகளில் தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது.
திமுக
திமுக
Published on

தருமபுரி:

தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரம், பொ.மல்லாபுரம், மாரண்டஹள்ளி, கம்பைநல்லூர், காரிமங்கலம், பாலக்கோடு, அரூர், கடத்தூர், கம்பைநல்லூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய 10 பேரூராட்சிகள் உள்ளன.

இதற்காக தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் இன்று காலை நடந்தது. இதில் மாவட்டத்தில் தி.மு.க. கூட்டணியில் பொ.மல்லாபுரம் பேரூராட்சி மட்டும் விடுதலை சிறுத்தை கட்சிக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. இதனால் 9 பேரூராட்சிகளிலும் வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர்களே தலைவர் பதவிக்கு வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு இருந்தனர்.

இதையொட்டி அந்தந்த பேரூராட்சி அலுவலகம் முன்பு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் உத்தரவுப்படி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பேரூராட்சி தலைவர் தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் எம். வீரமணி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அ.தி.மு.க, பா.ம.க, தே.மு.தி.க போட்டியிட முன்வராததால் பென்னாகரம் தி.மு.க. பேருர் கழக செயலாளரும், 5-வது வார்டு உறுப்பினருமான எம்.வீரமணி, போட்டியின்றி பேரூராட்சி தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி தலைவராக தி.மு.க.வை சேர்ந்த எம்.மாரி வெற்றி பெற்றார். இதேபோல் கடத்தூர் பேரூராட்சி தலைவராக கேஸ் மணி, அரூர் பேரூராட்சி தலைவராக இந்திராணி, கம்பைநல்லூர் பேரூராட்சி தலைவராக முருகன் ஆகியோர் வெற்றி பெற்றனர்,

பாப்பாரப்பட்டி பேரூராட்சி தலைவராக பிருந்தா, பாலக்கோடு பேரூராட்சி தலைவராக பி.கே.மணி, மாரண்டஹள்ளி பேரூராட்சி தலைவராக வெங்கடேசன், காரிமங்கலம் பேரூராட்சி தலைவராக பி.சி.ஆர். மனோகரனும் வெற்றி பெற்றுள்ளனர்.

பொ.மல்லாபுரம் பேரூராட்சியில் தி.மு.க. கூட்டணியில் தலைவர் பதவிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது.

இதனால் பேரூராட்சி தலைவர் பதவிக்கு விடுதலை சிறுத்தை கட்சி வேட்பாளர் சின்னவேடி போட்டியிட்டார். ஆனால் அவரை எதிர்த்து தி.மு.க.வை சேர்ந்த சாந்தி புஷ்பராஜ் மனு செய்தார்.

இதில் தி.மு.க. வேட்பாளர் சாந்தி 8 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் சின்னவேடி 7 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார். இவருக்கு பா.ம.க. வின் 2 வாக்குகள் விழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பொ.மல்லாபுரம் பேரூராட்சி தலைவர் பதவி தேர்தலில் திடீர் திருப்பமாக தி.மு.க. கைப்பற்றியுள்ளது, தருமபுரி மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com