கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 9 பேர் கூட்டாக தர்ணா

வெளியூர்க்காரர்களை உடனடியாக வெளியேற்றக் கோரி கோவை கலெக்டர் அலுவலகத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 9 பேர் கூட்டாக தர்ணாவில் ஈடுபட்டனர்.
அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் தர்ணா போராட்டம் நடைபெற்ற காட்சி
அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் தர்ணா போராட்டம் நடைபெற்ற காட்சி
Published on

கோவை:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.

இந்தநிலையில் கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு இன்று காலை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வந்தனர். அவர்கள் திடீரென கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எம்.எல்.ஏ.க்கள் பொள்ளாச்சி ஜெயராமன், அம்மன் அர்ச்சுணன், பி.ஆர்.ஜி. அருண்குமார், கே.ஆர். ஜெயராம், தாமோதரன், ஏ.கே. செல்வராஜ், அமுல் கந்தசாமி, சூலூர் கந்தசாமி உள்ளிட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர். .

எம்.எல்.ஏ.க்கள் போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.க்கள் அ.தி.மு.க.வினர் மீது பொய் வழக்கு போடுவதை கண்டிப்பதாகவும், வெளியூர் ஆட்களை மாவட்டத்தை விட்டு உடனடியாக வெளியேற்ற வேண்டும், தேர்தலை நியாயமான முறையில் நடத்த வேண்டும். தி.மு.க.வுக்கு துணை போகும் அதிகாரிகளை மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர்.

இந்த தகவல் கிடைத்ததும் ரேஸ்கோர்ஸ் போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட உள்ள எம்.எல்.ஏ.க்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்து விட்டனர். இதனையடுத்து மாவட்ட கலெக்டர் சமீரன் எம்.எல்.ஏ.க்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதுபற்றி எஸ்.பி. வேலுமணி எம்.எல்.ஏ. கூறியதாவது:-

கோவையில் இன்று பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது. வெளியூர்க் காரர்கள் இதுவரை வெளியேறவில்லை. தேர்தலை பாதுகாப்பாக நடத்த துணை ராணுவத்தை வரவழைக்க வேண்டும்.

தேர்தல் ஏற்பாடுகள் முறையாக நடைபெறவில்லை என்று கூறி தேர்தல் ஆணையம் உள்பட அனைவரிடமும் புகார் அளித்து விட்டோம் . ஆனால். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாவட்ட கலெக்டர் சட்டத்தை பின்பற்ற வேண்டும், இல்லை என்றால் அவரை மாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து பொள்ளாச்சி ஜெயராமன் கூறுகையில், உதயநிதி ஸ்டாலின் அரசியல் அநாகரீகத்தை செய்கிறார். முன்னாள் அமைச்சராக உள்ள வேலுமணிக்கு சாவுமணி அடிப்பேன் என்று பேசுகிறார். இந்த அராஜக செயலை கண்டிக்கிறோம். முழுக்க முழுக்க மாவட்ட நிர்வாகம் உடந்தையாக உள்ளது. தேர்தல் பணியில் இருந்து அந்த அதிகாரிக்ள் விலக வேண்டும். தி.மு.க. வெத்துவேட்டு அரசியல் செய்யக்கூடாது.” என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com