சட்ட நிபுணர்களுடன் கலந்து பேசி நிச்சயம் சமூக நீதி நிலைநாட்டப்படும்- சட்டசபையில் மு.க.ஸ்டாலின் உறுதி

வன்னியர் இடஒதுக்கீட்டைப் பொறுத்தவரைக்கும், சட்ட வல்லுநர்களுடன் உரிய ஆலோசனை நடத்தி, நிச்சயம் சமூக நீதி நிலைநாட்டப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டை சுப்ரீம்கோர்ட்டு ரத்து செய்துள்ள நிலையில் தமிழக சட்டசபையில் இன்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து உறுப்பினர்கள் பேசினார்கள்.

ஜி.கே.மனி (பா.ம.க.), செல்வபெருந்தகை (காங்கிரஸ்), வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி) ஆகியோர் பேசினார்கள். அப்போது வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

அப்போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அவர் கூறியதாவது:-

புரட்சி தலைவி அம்மா அரசு பல காலமாக போராடிய வன்னிய பெருமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் அடிப்படையில் தான் 10.5 சதவீத இடஒதுக்கீட்டை சட்டமாக கொண்டுவந்து நிறைவேற்றியது. ஆனால் அதற்கு முன்பே ஜாதி வாரியாக கணக்கெடுக்க நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம் தமிழ்நாடு முழுவதும் ஜாதிவாரியாக கணக்கெடுத்து அரசுக்கு தாக்கல் செய்திருக்க வேண்டும்.

அதன் அடிப்படையில் வன்னியர்களுக்கு ஒதுக்கீடு வழங்குவதென முடிவு செய்யப்பட்டது. ஆனால் அந்த சமயத்தில் தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்ததால் உடனே இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும் என்றும், 10.5 சதவீத இடஒதுக்கீடு வன்னியர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

அதை ஏற்று நாங்கள் சட்டம் கொண்டுவந்து நிறைவேற்றினோம். அதைத் தொடர்ந்து சிலர் நீதிமன்றம் சென்றனர். உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மூத்த வழக்கறிஞரை வைத்து வாதாடி இருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் தீர்ப்பு நமக்கு சாதகமாக கிடைத்திருக்கும். ஆனால் ஆவணங்களை கோர்ட்டில் முழுமையாக சமர்ப்பிக்கவில்லை. சமர்பித்து இருந்தால் நியாயமான தீர்ப்பு கிடைத்து இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்து பேசியதாவது:-

வன்னியர் சமுதாயத்திற்கு 10.5 விழுக்காடு சிறப்பு ஒதுக்கீடு வழங்கக்கூடிய “தமிழ்நாடு சட்டம் 8/2001 தொடர்பாக உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்குகளில் தமிழ்நாடு அரசு தீவிரமாக வாதாடியது.

அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த சட்டம் என்றாலும், எங்களைப் பொறுத்தவரையில், ஏற்கெனவே மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்திற்கு 20 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கிய அரசு என்ற அந்த நிலையிலே, உயர்நீதிமன்றத்தில் அரசு தலைமை வழக்கறிஞரே வாதாடியிருக்கிறார்.

உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர்கள் ராகேஷ் திவேதி, அபிசேக் மனு சிங்வி, முகுல் ரோத்தகி, வில்சன் உள்ளிட்டோர் தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளின் சார்பிலே ஆணித்தரமாக வாதாடியிருக்கிறார்கள்.

இந்த வழக்கில் எழுத்துப் பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்வது, தேவையான ஆவணங்களைப் பதிவு செய்வது ஆகிய அனைத்திலும் தமிழ்நாடு அரசு மற்றும் அதன் வழக்கறிஞர்கள் செயல்பாடுகள் மிகவும் பாராட்டத்தக்கதாக இருக்கிறது என உச்சநீதிமன்றமே குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறது.

இந்தச் சிறப்பு ஒதுக்கீட்டிற்கான பரிந்துரை 2012-ல் வழங்கப்பட்டது. ஆனால், இதற்கான சட்டமுன்வடிவு எப்பொழுது வந்தது? 2021 சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு மாலையில் வரப்போகிறது என்று காலையில் செய்தி வருகிறது. அன்று மாலையில், குறிப்பாக தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக, இந்தச் சட்டமுன்வடிவு அவையிலே கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

2012 முதல் 2021 வரை உள்ள இடைவெளிக்குப் பிறகு, காலையில் தேர்தல் அறிவிப்பு மாலையில் இச்சட்டம் என்று, அதுவும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பாகக் கொண்டு வந்து, 26.2.2021 அன்று நிறைவேற்றிய, அந்த அவசரம் தான் உயர்நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் வெளிவந்த இந்தத் தீர்ப்பிற்கு முக்கியக் காரணமாக அமைந்திருக்கிறது.

தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள மற்ற குறைகளை இந்த மன்றத்தில் நானும் ஒரு முறை சுட்டிக்காட்டி, “ஏட்டிக்குப் போட்டி அரசியல் நடத்த நான் தயாராக இல்லை”.

இந்தச் சிறப்பு ஒதுக்கீடு சட்டம் தற்காலிகமானது என்று யார் சொன்னது என்ற வாதத்திற்குள் கூட இப்போது நான் செல்ல விரும்பவில்லை. ஏனென்றால், இது மாநிலத்தினுடைய சமூக நீதிப் பிரச்சினை. சிறப்பு இட ஒதுக்கீடு தொடர்பான பிரச்சினை. ஆகவே, இந்த சிறப்பு இடஒதுக்கீட்டைப் பொறுத்தவரைக்கும், சட்ட வல்லுநர்களுடன் உரிய ஆலோசனை நடத்தி, நிச்சயம் சமூக நீதி நிலைநாட்டப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com