ராணுவ வீரர்களை தேர்வு செய்வது போன்று தி.மு.க. வேட்பாளர் தேர்வு கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும்- மு.க.ஸ்டாலின் கடிதம்

தி.மு.க. போட்டியிட உள்ள இடங்களுக்கான கழக வேட்பாளர்கள் தேர்வு என்பது, ராணுவ வீரர்களைத் தேர்வு செய்வது போன்ற நெறிமுறைகளுடன் கண்டிப்பானதாகவும் கட்டுக்கோப்பானதாகவும் இருக்க வேண்டும்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

சென்னை:

முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதவது:-

கடந்த இரண்டு மூன்று நாட்களாக, கழகத்தின் மாவட்டச் செயலாளர்களைத் தொடர்ச்சியாகத் தொடர்புகொண்டு, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஆற்ற வேண்டிய அனைத்துப் பணிகள் குறித்தும் ஆலோசனைகள் நடத்தி வருகிறேன்.

மிகுந்த ஊக்கத்துடனும், உற்சாகத்துடனும் ஒவ்வொருவரும் களப்பணியில் ஈடுபாடு கொண்டு இருப்பதை அறிந்துகொள்ள முடிகிறது.

கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்வு செய்வது, தோழமைக் கட்சிகளுக்கான இடங்களைப் பகிர்ந்து அளிப்பது, வாக்கு சேகரிப்பில் அனைவருடனும் ஒருங்கிணைந்து ஒரே நோக்கோடு செயல்படுவது என, ஒவ்வொரு கட்டத்திலும் கழக நிர்வாகிகள் கடமை உணர்வுடனும், மிகுந்த பொறுப்புடனும் செயலாற்றிட வேண்டும்.

தோழமைக் கட்சித் தலைவர்கள் பலர் அண்ணா அறிவாலயத்திற்கு வந்து, கழகத்தின் மாநில நிர்வாகிகள் மற்றும் கழகத்தின் தேர்தல் பொறுப்பாளர்களுடன் கலந்தாலோசனை நடத்தியுள்ளனர். தி.மு.க. தலைமையிலான ஆட்சியின் ஆக்கபூர்வமான செயல்பாடுகளுக்கு அருகில் இருந்து துணை நிற்கும் வகையில் அவர்கள் நன்னம்பிக்கையை வெளிப்படுத்தி உள்ளனர்.

மாவட்ட, ஒன்றிய, நகர அளவில் உள்ள கழக நிர்வாகிகள், அவரவர் தம் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் தோழமைக் கட்சியினருக்கு உரிய அளவிலான இடங்களை மனம் உவந்து ஒதுக்கீடு செய்வதில் சுணக்கமின்றிச் செயல்பட வேண்டும்.

கூட்டணிக் கட்சியின் உள்ளூர் நிர்வாகிகளுக்கு நெருடல் ஏற்படாத வகையில் கழகத்தினரின் அணுகுமுறை அவசியம் அமையவேண்டும் என்பதும், வெறும் தேர்தல் கூட்டணியாக இல்லாமல், கொள்கைக் கூட்டணியாக உள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தூய தோழமை தொடர்ந்திட வேண்டும் என்பதும் உங்களில் ஒருவனான என் வேண்டுகோள் ஆகும்.

கூட்டணிக் கட்சியினருக்கு ஒதுக்கீடு செய்தபிறகு, தி.மு.க. போட்டியிட உள்ள இடங்களுக்கான கழக வேட்பாளர்கள் தேர்வு என்பது, ராணுவ வீரர்களைத் தேர்வு செய்வது போன்ற நெறிமுறைகளுடன் கண்டிப்பானதாகவும் கட்டுக்கோப்பானதாகவும் இருக்க வேண்டும்.

அத்தகைய செயலாற்றல் கொண்டவர்களே கழகத்தின் வேட்பாளர்களாகக் களமிறக்கப்பட வேண்டும்.

சுயநலம் தவிர்த்து, பொதுநலச் சிந்தனையும் கொள்கைப் பற்றும் கொண்டு, இயக்கத்தின் வளர்ச்சிக்குத் தன்னை முழுமையாகவும் முழுநேரமும் அர்ப்பணித்துக் கொண்ட கழகத்தினருக்கு வேட்பாளர் தேர்வுகளில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

குற்றப் பின்னணி ஏதேனும் இருந்தால், அவை தொடர்பான வழக்குகளில் தன்னை நிரபராதி என்று சட்டப்பூர்வமாக நிரூபிக்கும் வரையில் அவர்களை வேட்பாளராகத் தேர்வு செய்திடல் நிச்சயமாகக் கூடாது என்பதை கழக நிர்வாகிகள் தவறாமல் மனதில் கொள்ள வேண்டும்.

தற்போது மகளிருக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டுடன் முதன்முறையாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது.

மகளிரணி, மகளிர் தொண்டர் அணி, தொழிலாளர் முன்னேற்றச் சங்கம், இளைஞரணி, மாணவரணி, இலக்கிய அணி, வழக்கறிஞர் அணி, மருத்துவர் அணி, தகவல்தொழில்நுட்ப அணி உள்ளிட்ட கழகத்தின் பல்வேறு அணிகளில் திறம்பட செயலாற்றக்கூடிய மகளிர் இருக்கிறார்கள்.

போராட்டக் களங்களைப் புன்னகையுடன் எதிர் கொண்டவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மக்களிடம் நற்பெயரும் செல்வாக்கும் பெற்றுள்ளனர். 50 விழுக்காடு மகளிருக்கான இட ஒதுக்கீட்டில், இத்தகையோருக்கு முன்னுரிமை அளித்திட வேண்டியது மிகவும் அவசியம் ஆகும்.

கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் நடுநிலையுடன் மிகுந்த கவனம் செலுத்தி, வெற்றி வேட்பாளர்களைத் தேர்வு செய்தபிறகு, அந்த வேட்பாளரின் வெற்றிக்கு, கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும் ஒத்துழைப்பு வழங்கி, ஓய்வின்றி, பயனுள்ள வகையில், பணியாற்ற வேண்டும்.

சொந்த விருப்பு, வெறுப்புகள் சிறிதளவும் தலையெடுக்க அனுமதிக்கவே கூடாது. கழக வேட்பாளர்கள் போட்டியிடும் இடங்களைப் போலவே தோழமைக் கட்சியினர் போட்டியிடும் இடங்களிலும் முழுமையான ஒருங்கிணைப்பும், உணர்வுப்பூர்வமான ஒத்துழைப்பும் களப்பணியும் அமைதல் வேண்டும்.

ஒவ்வொரு வார்டிலும் உள்ள ஒவ்வொரு வாக்காளரையும் சந்திக்கும் வகையில், தெருவுக்குத் தெரு, வீட்டுக்கு வீடு சென்று வாக்கு சேகரிப்புப் பணியை விரைவுபடுத்துங்கள். கொரோனா பரவலை மனதில்கொண்டு, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள கட்டுப்பாடு நெறிமுறைகளைப் பின்பற்றி, கழக உடன்பிறப்புகள் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்திட வேண்டும்.

கடந்த 8 மாதங்களில் நமது அரசு நிறைவேற்றியுள்ள திட்டங்கள், அதனால் மக்களுக்குக் கிடைத்துள்ள நன்மைகள், மகளிர் பெற்றுள்ள உரிமைகள், சலுகைகள், மாணவர்கள், உழவர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவரின் நலனுக்காகத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள், கொரோனா 2-வது பேரலையைத் திறம்படக் கையாண்டு 3-வது அலையில் பெரும் பாதிப்பு ஏற்படாத வகையில் பொதுமக்களை அரணாக நின்று காத்த நமது அரசு, கடும் நிதி நெருக்கடியிலும் நிறைவேற்றி வரும் சாதனைகளை மக்களிடம் சரியாக எடுத்துச் சொல்லி வாக்கு சேகரியுங்கள்.

தேர்தல் அறிக்கையில், 5 ஆண்டுகளில் நிறைவேற்ற, வழங்கப்பட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளும் படிப்படியாக முறையாக நிறைவேற்றப்படும் என்பதை எடுத்துச் சொல்லுங்கள்.

அந்தந்தப் பகுதியிலும் உள்ள மக்கள் முன்வைக்கும் கோரிக்கைகளையும் கட்டாயம் கவனத்தில் கொள்ளுங்கள். “இது உங்களுக்கான அரசு” என்பதை மக்களிடம் விளக்கித் தெரிவித்து, நம்பிக்கையைப் பெற்றிடுங்கள்.

சமூகநீதி, சுயமரியாதை, சாதி வேறுபாடற்ற மத நல்லிணக்கம், ஒருங்கிணைந்த வளர்ச்சி இவற்றை அடிப்படையாகக் கொண்ட ‘திராவிட மாடல்’ அரசாக விளங்கும் தி.மு.க.வின் திட்டங்களும், செயல் பாடுகளுமே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் களத்தில் நமக்கான நற்சான்றுக் கருவிகள். நல்லாட்சியின் விளைச்சலை, உள்ளாட்சியில் முழு வெற்றியாக அறுவடை செய்திட, ஊக்கத்துடன் அயராது பாடுபடுங்கள்.

அ.தி.மு.க ஆளுங்கட்சியாக இருந்தபோது நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலிலேயே அவர்களின் அனைத்து தில்லுமுல்லுகளையும் மீறி, தி.மு.க.தான் பெரும் வெற்றி பெற்றது.

நம்முடைய ஆட்சி அமைந்தபிறகு நடைபெற்ற 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் மகத்தான வெற்றி பெற்றோம்.

அன்றும் இன்றும் மக்கள் நம்மீதே மாறா நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள். அது என்றென்றும் தொடரும் வகையில் களப் பணியாற்றுங்கள். நகர்ப்புற உள்ளாட்சியில், நாடே போற்றிடும் வகையில் வெல்வோம்; நல்லாட்சியை மேலும் மேலும் முன்னெடுத்துச் செல்வோம்!

இவ்வாறு மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com