

சேலம்:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு சேலத்தில் பூத் சிலிப் வழங்கும் பணி தீவிரம் அடைந்து உள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள சேலம் மாநகராட்சி, 6 நகராட்சி, 31 பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகள் தீவிரம் அடைந்து வருகிறது. அதன்படி சேலம் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளில் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் 3 லட்சத்து 52 ஆயிரத்து 523 ஆண்கள், 3 லட்சத்து 66 ஆயிரத்து 751 பெண்கள், இதரர் 87 என மொத்தம் 7 லட்சத்து 19 ஆயிரத்து 361 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்கு அளிக்க வசதியாக 709 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
அதே போன்று 6 நகராட்சிகளில் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 752 ஆண்கள், 1 லட்சத்து 15 ஆயிரத்து 7 பெண்கள், இதரர் 19 என மொத்தம் 2 லட்சத்து 25 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.
நகராட்சி பகுதிகளில் மொத்தம் 273 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. 31 பேரூராட்சிகளில் ஒரு லட்சத்து 92 ஆயிரத்து 89 ஆண்கள், ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 790 பெண்கள், இதரர் 15 என மொத்தம் 3 லட்சத்து 90 ஆயிரத்து 894 வாக்காளர்கள் உள்ளனர்.
பேரூராட்சி பகுதிகளில் மொத்தம் 537 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. வாக்குச்சாவடி மையங்கள் அனைத்திலும் தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெறுகின்றன.
இதைத்தொடர்ந்து மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பூத் சிலிப் வழங்கும் பணி தொடங்கி உள்ளது. அதன்படி ரத்தினசாமிபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் பொதுமக்களின் வீடுகளுக்கு மாநகராட்சி பணியாளர்கள் நேரில் சென்று பூத் சிலிப் வழங்கி வருகின்றனர்.
இதே போன்று நகராட்சி, பேரூராட்சி பகுதிகளிலும் வீடு, வீடாக சென்று தேர்தல் பணியாளர்கள் பூத் சிலிப் வழங்க இருக்கிறார்கள்.