

சேலம்:
வடகிழக்கு எல்லைப்புற ரெயில்வே, அசாம் மாநிலம் லும்டிங் கோட்ட பகுதியில் கனமழை காரணமாக நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்பட்டு ரெயில்வே தண்டவாள பாதையில் மழைநீர் தேங்கியுள்ளது. இதையொட்டி கோவையிலிருந்து அசாம் மாநிலம் சில்சார் ரெயில் நிலையம் வரை செல்லும் ரெயில் மற்றும் சில்சார் ரெயில் நிலையத்திலிருந்து கோவை வரை இயக்கப்படும் ரெயில்கள் இயக்கத்தில் ரெயில்வே நிர்வாகம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி கோவை- சில்சார் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண். 12515) 29- ந் தேதி, மற்றும் வருகிற ஜூன் மாதம் 5,12,19,26 ஆகிய தேதிகளில் கோவை ரெயில் நிலையத்திலிருந்து இரவு 9.45 மணிக்கு புறப்படுகிறது. திருப்பூர், ஈரோடு , சேலம் வழியாக மேற்கண்ட தேதிகளில் கவுகாத்தி ரெயிலில் வரை செல்லும், இந்த ரெயிலானது கவுகாத்தி- சில்சார் ரெயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
இதேபோல் மறு மார்க்கத்தில் இயக்கப்படும் சில்சார்- கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண். 12516) வருகிற 31- ந் தேதி, மற்றும் ஜூன் மாதம் 7,14,21,28 ஆகிய தேதிகளில் சில்சார்- கவுகாத்தி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் கவுகாத்தி ரெயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக கோவை சென்றடையும். மேற்கண்ட தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.