சேலம் அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு

சேலம் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.எஸ். பி.டி.எஸ்.படிப்புக்கு விண்ணப்பித்திருந்த மாணவ - மாணவிகளின் சான்றிதழ் சரிபார்க்கும் பணி இன்று நடைபெற்றது.
.
.
Published on

சேலம்:

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புக்கான பொதுப்பிரிவினர் கவுன்சிலிங் ஆன்லைன் மூலம் கடந்த வாரம் தொடங்கியது. 

இதில் ஆன்லைனில் விண்ணப்பித்து, தேர்வானவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி  மாணவ-மாணவிகளின் சொந்த மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளிலோ அல்லது அருகில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளிலோ நடத்த சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

அதன்படி சேலம் குமாரமங்கலம் அரசு மருத்துவ கல்லூரியில் மாணவ- மாணவிகளுக்கான சான்றிதழ் சாரிபார்ப்பு பணிகள் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் ஒவ்வொரு நாளும் 160 பேர் வீதம் நேரில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி முதல் நாளில் 160 பேர் பங்கேற்றனர்.  2-வது நாள் (நேற்று)  160 பேர் கலந்து கொண்டனர். இதில் மாணவர் ஒருவர் மத்திய அரசின் அகில இந்திய மருத்துவ கோட்டாவிற்கு சென்று விட்டார்.

3-வது நாளான இன்று சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருச்சி, கரூர், ஈரோடு உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 160 பேர் நேரில் பங்கேற்றனர். உடன் அவர்களின் பெற்றோர்களும் வந்திருந்தனர்.

கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்கும் வகையில்  மாணவ-மாணவிகள் சமூக இடைவெளியுடன் தனித்தனியாக உட்கார வைக்கப் பட்டனர். 

பின்னர் ஒவ்வொரு மாணவ- மாணவிகளையும்  அழைத்து கணினி மானிட்டர் முன்பு உட்கார வைக்கப்பட்டர். முதலில் அவர்களின் முகம் கணினி வெப் காமிரா மூலம் பதிவு செய்யப்பட்டது. 

இதையடுத்து அவர்களுடைய  அனைத்து  அசல் மதிப்பெண் சான்றிதழ்கள், சாதி சான்றிதழ்கள், டி.சி., நீட் தேர்வு மதிப்பெண் சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ஆதார் அட்டை   உள்ளிட்டவை அனைத்தும் சரிபார்க்கப்பட்டன. 

இவற்றை சரிபார்த்து ஒப்புதல் ஆன்லைன் மூலமே சென்னையில் உள்ள மருத்துவ கல்வி இயக்குனரகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். 

அதன்படி  ஒவ்வொரு மாணவ-மாணவிகளின் சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட விபரம் பற்றிய  அறிக்கை ஆன்லைன் மூலமாக அனுப்பி வைக்கும் பணியில் அரசு ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். 

இதன் மூலம் மாணவ- மாணவிகள் தேர்வு செய்துள்ள கல்லூரிக்கு நேரடியாக சென்று அவர்கள் நியமன ஆணைகளை பெற்றுக் கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com