பரமத்திவேலூர் பகுதிகளில் சிவாலயங்களில் சித்திரை மாத வளர்பிறை பிரதோஷ வழிபாடு
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையத்தில் உள்ள பரமேஸ்வரர் ஆலயத்தில் சித்திரை மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
பின்பு சாமி ரிஷப வாகனத்தில் கோவிலை மூன்று முறை வலம் வந்தார். பின்னர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பெருமான், பரமேஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
பரமத்தி வேலூரில் 400 ஆண்டுகள் பழமையான எல்லையம்மன் கோவிலில் உள்ள ஏகாம்ப–ரேஸ்வரருக்கு சித்திரை மாத பிரதோஷத்தினை முன்னிட்டு வாசனை திரவி–யங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா கற்பூர தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அதேபோல் நன்செய் இடையாரில் உள்ள திருவேலீஸ்வரர் கோவில், பாண்டமங்கலம் பழைய காசி விஸ்வநாதர் ஆலயம், பிலிக்கல்பாளையம் அருகே கரட்டூரில் விஜயகிரி வடபழனி ஆண்டவர் கோவிலில் உள்ள ஈஸ்வரன் கோவில் நந்தி பெருமான், வடகரையாத்தூரில் உள்ள ஈஸ்வரன் கோவில், ஜேடர் பாளையத்தில் உள்ள ஈஸ்வரன் கோயில் மற்றும் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவிலில் சித்திரை மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.
இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

