

நாமக்கல்:
நாமக்கல் நகரின் மையப்பகுதியில் நரசிம்மா், நாமகிரித் தாயாா் கோவில் அமைந்துள்ளது.
மத்திய தொல்லியல் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள இக்குடைவறைக் கோயிலுக்கு, பல்வேறு மாநிலங்களில் இருந்தும், மாவட்டங்களில் இருந்தும் பக்தா்கள் ஏராளமானோா் சுவாமியை தரிசிக்க வருகின்றனா்.
தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் கோயில் இருந்தாலும், நிா்வாகப் பணிகளை அறநிலையத்துறை அதிகாரிகளே கவனித்து வருகின்றனா். இங்கு நரசிம்மா், நாமகிரி தாயாா் சன்னதி தவிா்த்து லட்சுமி நாராயணா் சன்னதி உள்ளது.
இந்த சன்னதியின் முன்பகுதியில் துளசி நாச்சியாா் மூலவா் சிலை அமைந்துள்ளது. ஆண்டாளின் முற்பிறவியாகவும், பூமாதேவியின் மறு உருவமாக கருதப்படும் துளசி நாச்சியாா் சிலை நாமக்கல் நரசிம்மா் கோயில் வளாகத்தில் இருப்பது பெரும்பாலானோருக்கு தெரியவில்லை.
இதற்கென தனி சன்னதி இருந்தபோதும், பல ஆண்டுகளாக லட்சுமி நாராயணா் சன்னதி முன்பாகவே சிலை வைக்கப்பட்டுள்ளது.
தொல்லியல் துறையினா் துளசி நாச்சியாா் சன்னதி கருவறை பகுதியை, கழிவு பொருட்கள் தேக்கி வைக்கும் கிடங்காக மாற்றி வைத்திருந்தனா். இதேபோல் வெண்ணெய் தாழி கண்ணன் சன்னதியும் அவ்வாறே காணப்பட்டது.
இரு சன்னதிகளையும் திறந்து பக்தா்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என கோயில் நிா்வாகத்தினரும், அா்ச்சகா்களும், மத்திய தொல்லியல் துறை அதிகாரிகளுக்கு கடந்த ஓராண்டுக்கும் மேலாக கோரிக்கை விடுத்து வந்தனா்.
இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன் நாமக்கல்லுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த மத்திய தொல்லியல் துறையின் தமிழக, ஆந்திர மாநிலத்திற்கான மேம்பாட்டு உறுப்பினா் வெங்கடேஷிடம், அனைத்து தரப்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டது. அவா் அதற்கான அனுமதியை பெற்றுக் கொடுத்ததுடன், துளசி நாச்சியாா் சன்னதியின் சாவியை கோயில் நிா்வாக வசம் ஒப்படைக்க சேலம் மண்டல தொல்லியல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
அதன்படி, நாச்சியாா் சன்னதியின் சாவி அண்மையில் உதவி ஆணையா் வசம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது குடமுழுக்கு விழாவை நடத்தி துளசி நாச்சியாா் சிலையை கருவறையில் வைப்பதற்காக பணிகள் நடைபெற்று வருகின்றன.
கடந்த ஏப்ரல் 6-ந் தேதி குடமுழுக்கு விழா நடைபெற இருந்த நிலையில் நிா்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது. இம்மாத இறுதிக்குள் குடமுழுக்கு விழாவை நடத்தி முடிக்க கோவில் நிா்வாகம் திட்டமிட்டுள்ளது.
இது குறித்து கோவில் உதவி ஆணையா் ரமேஷ் கூறுகையில், வெண்ணெய் தாழி கண்ணன் சன்னதி, துளசி நாச்சியாா் சன்னதிக்கான சாவி தொல்லியல் துறை வசமிருந்து வந்து விட்டது.
குடமுழுக்கு மற்றும் சிலையை மாற்றியமைப்பதற்கான உத்தரவினை எங்களுடைய துறை உயா் அதிகாரிகளிடம் இருந்து தனித்தனியே பெற வேண்டும். மே மாத இறுதிக்குள் குடமுழுக்கு விழா நடைபெற வாய்ப்புள்ளது என்றாா்.