

திருச்செங்கோடு:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே ராமாபுரம் கொசவம்பாளையத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி ரம்யா (வயது 29). கர்ப்பிணியாக இருந்த இவர் உடல்நலக் குறைவினால் இறந்தார்.
இதை அறிந்த மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங், குடும்ப நலத்துறை துணை இயக்குனர் டாக்டர் வளர்மதி தலைமையில் அரசு மருத்துவர்கள் மற்றும் மருத்துவ அலுவலர்கள், காவல் துறை, வருவாய்த் துறை அலுவலர்கள் கொண்ட குழு அமைத்து விசாரணை செய்ய உத்தரவிட்டார்.
உயிரிழந்த ரம்யா, அந்த பகுதியிலுள்ள மருந்தகத்தில் மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் கருக்கலைப்பு மாத்திரை வாங்கி சாப்பிட்டதாக விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட மருந்தகத்திற்கு மருத்துவ துறையினர் வந்தபோது மருந்தகம் பூட்டி இருந்தது. மேலும் மருந்தக உரிமையாளரை தொடர்பு கொண்டனர்.
மருந்தகத்தின் முன்புறம் வைக்கப்பட்டிருந்த மருந்து பெட்டியில் பயன்படுத்திய காலி ஊசிகள் இருந்ததை பார்வையிட்டனர். நீண்ட நேரமாகியும் மருந்தகத்திற்கு உரிமையாளர் வராததை அடுத்து மருந்தகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.
இந்த நிலையில் சீல் வைக்கப்பட்ட மருந்தகத்தின் மேற்கூரையை நள்ளிரவு மர்ம நபர்கள் பிரித்து உள்ளே புகுந்து மருந்துகளை எடுத்துச் சென்று விட்டார்கள்.
இது குறித்து உரிமையாளர் முத்துசாமியிடம் விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு மல்லசமுத்திரம் போலீஸ் நிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலர் கிருஷ்ணன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதுபற்றி அதிகாரிகள் கூறியதாவது:-
கொரோனா காலத்திலிருந்து தற்போது வரை தாய்மார்கள் கருக்கலைப்பு செய்யும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பெண்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் பயிற்சி பெறாத மருத்துவர், அங்கீகாரம் பெறாத மருத்துவமனைகள் மூலமாகவோ மற்றும் மருந்தகங்களில் கருக்கலைப்பு மாத்திரைகள் வாங்கி சாப்பிடுவதால் பக்க விளைவுகள் மற்றும் மரணம் ஏற்படுகிறது.
இதுபோன்ற பிரச்சினைகளுக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சை செய்து கொள்ளலாம்.
தங்கள் பகுதி கிராம சுகாதார செவிலியரை தொடர்பு கொண்டு ஆலோசனைகளைப் பெறலாம்.
மருந்தகங்களில் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்துகள் விற்பனை செய்யக்கூடாது. அனுமதி பெறாமல் மருந்து, மாத்திரைகளை விற்பவர்கள் மீதும், போலி மருத்துவர்கள் மீதும் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.