

மதுரை
மதுரை மாவட்டத்தில் மாநகராட்சி, 3 நகராட்சிகள், 9 பேரூராட்சிகளில் 322 கவுன்சிலர் பதவிக்கு நாளை மனுத்தாக்கல் தொடங்குகிறது. முக்கிய பதவிகளை கைப்பற்றும் ஆர்வம் பெண்களுக்கு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக நாளை (28ந்தேதி) மனுத்தாக்கல் தொடங்க உள்ள நிலையில் மதுரை மாவட்டத்தில் தேர்தலுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன. மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் மற்றும் நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தேர்தல் நடைபெற இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகளை கடுமையாக கடைபிடிக்கவும், கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் இன்று முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மதுரை மாநகராட்சியில் 100 கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 50 சதவீத இட ஒதுக்கீடு பெண்களுக்கு அளிக்கப்பட்டுள்ளதால் சரிபாதி வார்டுகளில் பெண்கள் போட்டியிடுகிறார்கள். மேலும் மதுரை மேயர் பதவியும் பொதுப்பிரிவில் பெண்ணுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
எனவே மதுரை மேயர் பதவியை கைப்பற்றும் ஆர்வம் பெண்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் மேயர் உள்ளிட்ட முக்கிய பதவிகளை கைப்பற்ற ஆர்வத்துடன் செயல்பட்டு வருகிறார்கள்.
மதுரை மாநகராட்சியில் 15 லட்சத்து 73 ஆயிரத்து 289 வாக்காளர்கள் உள்ளனர். 100 வார்டுகளில் உள்ள இந்த வாக்காளர்கள் புதிய கவுன்சிலர்களை தெரிவு செய்வார்கள். இதை தொடர்ந்து மார்ச் 4ந்தேதி மேயர் மற்றும் துணை மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தப்பட்டு நடத்தப்படுகிறது.
மதுரை மாவட்டத்தில் மேலூர், திருமங்கலம், உசிலம்பட்டி ஆகிய 3 நகராட்சிகள் உள்ளன. மேலூரில் 27 வார்டுகளும், திருமங்கலத்தில் 27 வார்டுகளும், உசிலம்பட்டியில் 24 வார்டுகள் என மொத்தம் 78 வார்டுகள் உள்ளன. இதில் 39 கவுன்சிலர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளான ஏ.வெள்ளாளப்பட்டி, அலங்காநல்லூர், பாலமேடு, வாடிப்பட்டி, சோழவந்தான், எழுமலை, பேரையூர், டி.கல்லுப்பட்டி, பரவை ஆகிய பேரூராட்சிகளில் மொத்தம் 144 கவுன்சிலர் பதவிகள் உள்ளன.
இந்த பதவிகளை பிடிப்பதற்கு தி.மு.க., அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் வியூகம் வகுத்து செயல்பட்டு வருகின்றன. மதுரை மேயர் பதவி மற்றும் நகரசபை தலைவர், பேரூராட்சி தலைவர், மதுரை துணைமேயர், மண்டல தலைவர்கள், பேரூராட்சி, நகராட்சி துணைத்தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய பதவியை பிடிக்க பெண்கள் அதிக ஆர்வத்துடன் இருப்பதால் திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகளில் வேட் பாளராகும் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள்.
இன்னும் ஓரிரு நாளில் பிரதான கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிடும் பட்சத்தில் மதுரை மாவட்டத்தில் தேர்தல் விறுவிறுப்பான கட்டத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.