

தேனி மாவட்டத்தில் 6 நகராட்சிகள், 22 பேரூராட்சிகள் என 513 பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் 7 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதனையடுத்து 506 கவுன்சிலர் பதவிகளுக்கான தேர்தல் இன்று தொடங்கியது.
அந்த பதவிகளுக்கு 1960 பேர் வேட்பாளர்களாக களம் இறங்கி உள்ளனர். 733 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 3544 வாக்குப்பதிவு அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் ஒவ்வொரு வாக்குப்பதிவு மையங் களிலும் 2 தன்னார்வலர்கள் வீதம் 1466 தன்னார்வலர்கள் வாக்காளர்களுக்கு உதவும் பணியில் ஈடுபட்டனர்.
மாற்றுத்திறனாளிகள் எளிதாக வாக்களிக்கும் வகையில் சக்கர நாற் காலிகள் ஏற்பாடு செய்யப்பட் டிருந்ததுடன் சாய்வு தளமும் அமைக்கப்பட்டிருந்தது. அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சி.சி.டி.வி. காமிரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது.
பதட்டமான வாக்குச் சாவடிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டிருந்தனர். மாவட்டம் முழுவதும் 1756 போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கு முன்பாகவே பல வாக்குச் சாவடிகளில் பொதுமக்கள் காத்திருந்தனர். முன்னதாக மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு எந்திரங்கள் சரியான முறையில் உள்ளதா? என வேட்பாளர் மற்றும் முகவர்கள் முன்னிலையில் சரிபார்க்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஓட்டுப்பதிவு தொடங்கியதும் வரிசையில் காத்திருந்த வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். குறிப்பாக இளைய தலைமுறை வாக்காளர்களும் 90 வயதை கடந்த முதியவர்களும் வரிசையில் காத்திருந்து ஓட்டு போட்டனர்.