ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று கன்னியாகுமரியில் அலைமோதிய சுற்றுலா பயணிகள்

சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர்.படகில் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர்.
படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்த சுற்றுலா பயணிகளை படத்தில் காணலாம்
படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்த சுற்றுலா பயணிகளை படத்தில் காணலாம்
Published on

கன்னியாகுமரி:

உலகப் புகழ் பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர்.

அதன்பிறகு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் காலையில் இருந்தே ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர்.மேலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கிய பிறகு அவர்கள் படகில் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர்.

மேலும் காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுதுபோக்கு பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

இந்த சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. கடற்கரைப்பகுதியில் சுற்றுலா போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com