

நாகர்கோவில் :
ெதாழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் உத்தரவின்பேரில் மதுரை தொழிலாளர் ஆணையர் ஜெயபாலன் அறிவுரையின்படி நெல்லை தொழிலாளர் இணை ஆணையர் சுமதி வழிகாட்டுதலின்படி விடுமுறை தினமான ஆகஸ்டு 15-ந்தேதி அன்று அனைத்து நிறுவனங்களிலும் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது.
அதன்படி நாகர்கோவில் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மணிகண்டபிரபு தலைமையில் நாகர்கோவில் தொழிலாளர் துணை ஆய்வாளர் குமரேசன், உதவி ஆய்வாளர்கள் மன்னன்பெருமாள், ஸ்ரீதர், பாலசுப்பிரமணியன் ஆகியோர் நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அதன்படி அங்குள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சுதந்திர தினத்தன்று விடுமுறை அளிக்க வேண்டும். அதற்கு மாறாக விருப்பத்தின் பேரில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது ஊதியத்துடன் கூடிய மாற்று விடுப்பு வழங்கப்பட வேண்டும்.
இதற்கு கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் வேலை அளிப்பவர் படிவம் வி.ஏ.விலும், உணவு நிறுவனங்களில் வேலை அளிப்பவர் படிவம் ஐ.பி.இ.இ.யிலும் பணிபுரிய விருப்பம் தெரிவிக்கும் தொழிலாளர்களிடம் கையொப்பம் பெற்று நகலை நிறுவனத்தின் அறிவப்பு பலகைகளிலும், மற்றொரு நகலை சம்பந்தப்பட்ட தொழிலாளர் துணை அல்லது உதவி ஆய்வாளர்களுக்கு 24 மணி நேரத்திற்கு முன்பே அனுப்ப வேண்டும்.
இந்த விதிமுறைகளை கடைபிடிக்க தவறிய 20 கடைகள், 12 உணவு நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த தகவலை நாகர்கோவில் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜெ.மணிகண்டபிரபு தெரிவித்துள்ளார்.