வங்கக் கடலில் 21ஆம் தேதி புயல் உருவாகும்- மீனவர்களுக்கு எச்சரிக்கை

தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வுபகுதி தற்பொழுது தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்தியரேகை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதியில் நிலவுகிறது.
வானிலை நிலவரம்
வானிலை நிலவரம்
Published on

சென்னை:

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். நாளை மறுநாள் (19.03.2022) முதல் 21ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சூரளகோட்டில் (கன்னியாகுமரி) 5 செமீ மழை பெய்துள்ளது. பெருஞ்சாணி அணை, புத்தன் அணை பகுதியில் தலா 4 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

நேற்று காலை தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வுபகுதி தற்பொழுது தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்தியரேகை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதியில் நிலவுகிறது. இது, கிழக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் 19ம் தேதி காலை நிலவக்கூடும். இது, வடக்கு திசையில் அந்தமான் கடலோர பகுதி வழியாக நகர்ந்து 20ம் தேதி காலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும்.

பின்னர் 21ம் தேதி புயலாக வலுப்பெற்று வடக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து வங்காளதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடலோர பகுதியில் 22ம் தேதி காலை நிலைபெறக் கூடும்.

எனவே இன்று மற்றும் நாளை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இந்த பகுதிகளில் கடல் சீற்றதுடன் காணப்படும். எனவே மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதேபோல் மார்ச் 21 முதல் 23 வரை கிழக்கு மத்திய வங்கக் கடலுக்கும், மார்ச் 22 முதல் 23 வரை வடகிழக்கு வங்கக் கடலுக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com