கோவையில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல்

இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.தென்மாவட்டத்தில் இருந்து வந்துள்ளீர்களா? என கேட்டு கல்லூரி மாணவர்களை தாக்கியது தெரியவந்தது.
கோவையில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல்
Published on

கோவை:

தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர் வினோத்(22). இவர் கோவை க.க.சாவடி பிச்சனூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார். கல்லூரி விடுதி அறையில் தங்கி கல்லூரிக்கு சென்று வருகிறார்.

இந்நிலையில், சம்பவத்தன்று இரவு வினோத், தனது கல்லூரி நண்பர்கள் புதுக்கோட்டையை சேர்ந்த முகிலன்(20), கள்ளக்குறிச்சியை சேர்ந்த மனோஜ்குமார்(21) ஆகியோருடன் கல்லூரி அருகே உள்ள பேக்கரிக்கு டீ குடிக்க சென்றனர்.

அப்போது அங்கிருந்த சில வாலிபர்கள் வினோத் மற்றும் அவரது நண்பர்களிடம் தகராறு செய்தனர். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த அந்த வாலிபர்கள் வினோத் மற்றும் அவரது நண்பர்களை கற்களால் தாக்கி மிரட்டி சென்றனர்.

இதில் வினோத் மற்றும் அவரது நண்பர்கள் 2 பேருக்கும் பலத்தகாயம் ஏற்பட்டது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு மதுக்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

பின்னர் இது குறித்து மதுக்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், தென்மாவட்டத்தில் இருந்து வந்துள்ளீர்களா? என கேட்டு கல்லூரி மாணவர்களை தாக்கியது தெரியவந்தது.

இதனையடுத்து அவர்களை தாக்கிய பிச்சனூரை சேர்ந்த தனியார் நிறுவன சூப்பர்வைசர் பூமணி(21), பிச்சனூர் முனியப்பன் கோவில் வீதியை சேர்ந்த மற்றொரு தனியார் கல்லூரி கேண்டீன் கேஷியர் ரவிக்குமார்(19), பிச்சனூர் அண்ணாநகரை சேர்ந்த கல்லூரி மாணவர் முருகேசன்(19) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் மீது தாக்குதல், மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com