பரமத்தி அருகே குடிசை வீட்டில் திடீர் தீ விபத்து

சரவணன் (வயது 37) விவசாயி குடிசை‌ வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு திடீரென குடிசை வீடு தீப்பற்றி எரிய தொடங்கியது.
பரமத்தி அருகே குடிசை வீட்டில் திடீர் தீ விபத்து
Published on

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி அருகே மாணிக்கநத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட பனங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 37) விவசாயி.

இவர் குடிசை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு திடீரென குடிசை வீடு தீப்பற்றி எரிய தொடங்கியது. இதை பார்த்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது காற்று வேகமாக வீசியதால் தீ மளமளவென பரவி வீடு முழுவதும் பற்றி எரியத் தொடங்கியது. இதனையடுத்து அருகில் இருந்த மோட்டார் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைக்க தொடங்கினர்.

மேலும் இது குறித்து நாமக்கல் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்து கட்டுப்படுத்தினர். இந்த தீ விபத்தில் குடிசை வீட்டில் இருந்த சுமார் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பீரோ, மின்விசிறி, கிரைண்டர், மிக்சி மற்றும் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப், ரொக்கம் ரூ.25 ஆயிரம், வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்டவை முற்றிலும் எரிந்து நாசமானது.

மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகின்றது. தீ விபத்து குறித்து பரமத்தி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com