ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது சசிகலா படத்தை போட விடாமல் தடுத்ததே தினகரன்தான்: திண்டுக்கல் சீனிவாசன் குற்றச்சாட்டு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது சசிகலா படத்தை போட விடாமல் தடுத்து நிறுத்தியது தினகரன்தான் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குற்றம்சாட்டினார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது சசிகலா படத்தை போட விடாமல் தடுத்ததே தினகரன்தான்: திண்டுக்கல் சீனிவாசன் குற்றச்சாட்டு
Published on

மதுரையில் அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:-

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி.தினகரன் போட்டியிட்டார். அப்போது சசிகலாவின் படத்தை போடவேண்டாம். அவரது படத்தைபோட்டால் மக்கள் அ.தி.மு.க.வுக்கு வாக்கு அளிக்க மாட்டார்கள் என்று சொன்னதே தினகரன்தான்.

உங்கள் சித்தியின் படத்தை ஏன் போடக்கூடாது என்று சொல்கிறீர்கள் என்று கேட்டோம். அப்போது மக்களிடம் சசிகலாவுக்கு கடுமையான எதிர்ப்பு இருக்கிறது என்றார் தினகரன். இப்போது கூட அதற்கு விளக்கம் தரவில்லை. ஆனால் எங்கள் மீது தேவையற்ற குற்றச்சாட்டுகளை கூறுகிறார்.

தினகரனுக்கு ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன். உங்கள் சித்தியையே நீங்கள் ஏற்றுக்கொள்ளாதபோது 1½ கோடி தொண்டர்கள், புரட்சித்தலைவர், புரட்சித் தலைவியின் விசுவாசிகள் எப்படி சசிகலாவை ஏற்றுக் கொள்வார்கள்.


சசிகலா சிறையில் இருந்த நேரத்தில் தன்னைத்தானே வேட்பாளராக முன்னிறுத்தி கொண்டவர்தான் தினகரன்.

சசிகலா காலில் நாங்கள் விழுந்தது உண்மை. வயதில் பெரியவர்கள் காலில் சிறியவர்கள் விழுவது சகஜம் தான். ஆனால் அதையும் விமர்சனம் செய்து தினகரன் பேசி வருகிறார். இப்போது கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த புதிய நிர்வாகிகளையும் நியமிக்கிறார்.

அ.தி.மு.க.வில் நிர்வாகிகளை நியமிக்க தினகரனுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது. 60 நாட்களில் பிரிந்து சென்ற அணிகள் ஒன்று சேரவேண்டும் என்று சொன்னார் தினகரன். நாங்களும் ஒன்று சேர்ந்து விட்டோம்.

இதனை பார்த்து வாழ்த்த வேண்டிய தினகரன் அம்மா உருவாக்கி தந்த ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்கிறார். அதற்காக தி.மு.க.வுடன் ரகசிய பேரம் பேசி ஆட்சியை, கட்சியை அழிக்க தினகரன் நினைக்கிறார். அவரது எண்ணம் நிறைவேறாது. எப்போது தேர்தல் வந்தாலும் தி.மு.க. ஜெயிக்க முடியாது.

தினகரன் நாட்டிற்கு சேவை செய்து சிறைக்கு செல்லவில்லை. பல்வேறு மோசடி செய்தார். ஜெயிலுக்கு போனார். தினகரனுக்கு என்று மக்கள் மத்தியில் எந்த செல்வாக்கும் கிடையாது. அவருக்கு கட்சியை நடத்துவதற்கான சக்தியும், திராணியும் இல்லை.

நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் டி.டி.வி.தினகரன். சசிகலாவின் மன்னார்குடி பகுதியில் கூட அவர்களுக்கு செல்வாக்கு இல்லை. அங்கே தி.மு.க.தான் கடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றது.

எனவே புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா கட்டிக்காத்த கட்சியையும், ஆட்சியையும் எந்த விலை கொடுத்தாவது காப்போம். அதற்கு நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து செயல்படவேண்டும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com