

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் சோழநாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் உள்ளது.
இந்த சங்கத்துக்கு நிர்வாகிகள் தேர்தலையொட்டி இன்று (26-ந் தேதி) வேட்பு மனுத்தாக்கல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதையொட்டி இன்று காலை 10 மணியளவில் டி.டி.வி.தினகரன் ஆதரவாளரான கும்பகோணம் ஒன்றிய செயலாளர் முருகானந்தம் தலைமையில் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் வேட்பு மனுத்தாக்கல் செய்ய வந்தனர்.
அப்போது சங்க தேர்தல் அதிகாரி நீண்ட நேரமாகியும் வரவில்லை. இதனால் பொறுமையிழந்த தினகரன் ஆதரவாளர்கள் அங்கிருந்த ஊழியர்களிடம் கேட்டனர். அதற்கு அவர்கள் சரியான பதிலை கூறாததால் தினகரன் ஆதரவாளர்கள் ஆத்திரம் அடைந்தனர்.
உடனே அவர்கள் அலுவலகத்தில் இருந்த சுமார் 8-க்கும் மேற்பட்ட ஊழியர்களை வைத்து ஷட்டரை இழுத்து மூடி பூட்டு போட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து கூட்டுறவு சங்கம் முன்பு அவர்கள் , வேட்பு மனு தாக்கலுக்கு வராத தேர்தல் அதிகாரியை கண்டித்து கோஷமிட்டனர்.
இதுபற்றி தினகரன் ஆதரவாளர்கள் கூறியதாவது:-
தஞ்சை மாவட்டம் முழுவதும் கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேடு நடந்து வருகிறது. ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் மட்டுமே பொறுப்புக்கு வரவேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் தான் தேர்தல் அதிகாரிகள் அலுவலகத்துக்கு வர பயந்து போய் இருக்கிறார்கள். மேலும் சங்க நிர்வாகிகளை ஏற்கனவே தேர்வு செய்து வைத்து விட்டார்கள் என்று நினைக்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்று உடையாளூர் தொடக்க கூட்டுறவு சங்க அலுவலகத்துக்கும் சென்று தினகரன் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த நிலையில் தினகரன் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்திய சில நிமிடங்கள் கழித்து தி.மு.க.வினர் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் பட்டீஸ்வரம் கூட்டுறவு சங்க அலுவலகத்துக்கு வந்தனர்.