

சிம்லா:
இமாச்சலப்பிரதேசம் மாநில சட்டசபைக்கான 68 புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக நடைபெற்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிவரும் நிலையில் மாலை 5 மணி நிலவரப்படி முடிவுகள் அறிவிக்கப்பட்ட 34 தொகுதிகளில் பா.ஜ.க. வேட்பாளர்கள் 20 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 12 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சேர்ந்த ஒரு வேட்பாளரும் ஒரு சுயேட்சை வேட்பாளரும் வெற்றி பெற்றுள்ளனர்.
24 தொகுதிகளில் பா.ஜ.க. வேட்பாளரும், 9 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களும், ஒரு தொகுதியில் சுயேட்சை வேட்பாளரும் முன்னிலை வகித்து வருகின்றனர்.
இங்கு ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை பலமான 35 இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்று விடும் என்பது உறுதியாகி விட்டது. ஆனால், அக்கட்சியின் முதல் மந்திரி வேட்பாளராக சுஜன்பூர் தொகுதியில் முன்னிறுத்தப்பட்ட பிரேம் குமார் துமால் காங்கிரஸ் வேட்பாளர் ராஜிந்தர் ரானாவிடம் சுமார் 3,500 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
அதேவேளையில், ஆறு முறை அம்மாநில முதல் மந்திரியாக பதவி வகித்த வீரபத்ர சிங், காங்கிரஸ் வேட்பாளராக அக்ரி தொகுதியில் போட்டியிட்டு 6,051 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
தோல்வியடைந்த பா.ஜ.க. முதல் மந்திரி வேட்பாளர் பிரேம் குமார் துமால் போட்டியிடுவதற்கு வசதியாக தான் வெற்றிபெற்ற குட்லேஹர் தொகுதியை விட்டுகொடுக்க தயாராக உள்ளதாக அங்கு எம்.எல்.ஏ.வாக தேர்வாகியுள்ள பா.ஜ.க. வேட்பாளர் வரிந்தர் கன்வர் தெரிவித்துள்ளார்.