அ.தி.மு.க. அணிகளை இணைக்க திவாகரன் திடீர் முயற்சி

தினகரனுக்கும், திவாகரனுக்கும் மோதல் இருந்து வருவதாக கூறப்படும் நிலையில், அ.தி.மு.க. அணிகள் இணைப்பில் திவாகரன் வேகம் காட்டி வருகிறார்.
அ.தி.மு.க. அணிகளை இணைக்க திவாகரன் திடீர் முயற்சி
Published on

சென்னை:

ஜெயலலிதாவின் மரணத்துக்கு பிறகு சசிகலா அ.தி.மு.க.விலும், ஆட்சியிலும் கால் பதிக்க நினைத்ததால் பிளவு ஏற்பட்டது.

ஓ.பன்னீர் செல்வம் தனி அணியாக செயல்பட்ட நிலையில் சசிகலா ஆதரவாளர்கள் அனைவரும் ஒன்று திரண்டனர்.

பெரும்பாலான எம்.எல். ஏ.க்களின் ஆதரவு சசிகலாவுக்கு இருந்ததால் அவரது உத்தரவின் பேரிலேயே எடப்பாடி பழனிசாமி முதல்- அமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.

இதன் பின்னர் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவும், இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரனும் அடுத்தடுத்து சிறை சென்றனர்.

இதனைதொடர்ந்து இவர்கள் இருவரையும் கட்சியில் இருந்து ஒதுக்கி வைப்பதாக அமைச்சர்கள் அறிவித்தனர். இதனால் அ.தி.மு.க.வில் மீண்டும் பிளவு ஏற்பட்டது. தினகரன் ஆதரவாளர்கள் தனி அணியாகவும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் இன்னொரு அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர்.

இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியும், ஓ.பி.எஸ். அணியும் இணைவதற்கான பேச்சு வார்த்தை தொடங்கும் சூழல் ஏற்பட்டது.

ஆனால் 2 அணிகளை சேர்ந்தவர்களும், மாறி மாறி தெரிவித்த கருத்துக்கள் அதில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தின.

இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்னர் அ.தி.மு.க. அம்மா அணியை சேர்ந்த துணை சபாநாயகர் தம்பிதுரை பெங்களூர் சிறைக்கு சென்று சசி கலாவை சந்தித்து பேசினார். இதன் பின்னரே ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா வேட்பாளருக்கு ஆதரவளிக்கும் முடிவை அ.தி.மு.க. எடுத்தது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த தம்பிதுரை ஜனாதிபதி தேர்தலுக்காக ஆதரவு முடிவை எடப்பாடி பழனிசாமியும், சசிகலாவும் சேர்ந்தே எடுத்தனர் என்று கூறினார்.

அ.தி.மு.க.வில் இருந்து சசிகலா ஒதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருந்த நிலையில் தம்பிதுரையின் இந்த கருத்து ஓ.பி.எஸ். அணியினரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனையடுத்து இனி, இணைப்பு சாத்தியம் இல்லை என்று திட்டவட்டமாக அறிவித்த ஓ.பன்னீர்செல்வம் பேச்சு வார்த்தை குழுவையும் கலைத்தார்.

இதனால் அ.தி.மு.க. அணிகள் இணைப்பு முயற்சி முற்றுப்பெற்றுவிட்டதாகவே கருதப்பட்டது.

இந்த நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் இணைப்பு பேச்சு நடந்து வருவதாக தெரிவித்த கருத்துக்கள்தான் பரபரப்பை ஏற்படுத்தின. இதற்கு ஓ.பி.எஸ். அணி கடும் கண்டனம் தெரிவித்தது.

ஜெயக்குமார் விளம்பரத்துக்காக இது போன்று பேச வேண்டாம் என்று ஓ.பி.எஸ். அணியினர் எச்சரிக்கை விடுத்தனர்.அதோடுஅந்த விவகாரம்அடங்கி போனது.

இது போன்ற சூழலில் இரட்டை இலை சின்னத்தை மீண்டும் பெறுவதற்கு 2 அணிகளுமே போட்டி போட்டு பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்தன.

அதே நேரத்தில் ஓ.பி.எஸ். அணி சார்பில் மா.பாண்டிய ராஜன் எம்.எல்.ஏ. சுப்ரீம் கோர்ட்டிலும் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது போன்ற காரணங்கள் இணைப்பு முயற்சிக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போடும் வகையிலேயே அமைந்திருந்தன.

ஆனால் 2 அணிகளையும் இணைக்கும் முயற்சிகள் ரகசியமாக நடைபெற்று வருவதாகவே கூறப்படுகிறது.

இதற்கான முயற்சியில் சசிகலாவின் தம்பி திவாகரன் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர் ஓ.பி.எஸ். அணியினருடன் சமாதான பேச்சு நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

அ.தி.மு.க.வில் இருந்து ஓரங்கட்டப்பட்ட தினகரன், அடுத்த மாதம் 5-ந் தேதிக்கு பின்னர் தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ள நிலையில் திவாகரனின் இணைப்பு முயற்சிக்கு எந்த அளவுக்கு பலன் அளிக்கும் என்றும் தெரியவில்லை.

தினகரனுக்கும், திவாகரனுக்கும் மோதல் இருந்து வருவதாக கூறப்படும் நிலையில், அ.தி.மு.க. அணிகள் இணைப்பில் திவாகரன் வேகம் காட்டி வருவது முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com