

மும்பையில் இருந்து உத்தரப்பிரதேசம் மாநில தலைநகரான லக்னோ நோக்கி 186 பயணிகளுடன் இன்று காலை புறப்பட்ட ஏர் இன்டிகோ நிறுவனத்துக்கு சொந்தமான A320 ரக ஏர்பஸ் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது அந்த விமானத்தின் இரண்டாவது என்ஜின் திடீரென்று முற்றிலுமாக செயலிழந்தது.
இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த விமானி, காலை 9.38 மணியளவில் அருகாமையில் உள்ள அகமதாபாத் விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை உடனடியாக தொடர்பு கொண்டார்.
நிலைமையை விவரித்து, அவசரமாக தரையிறங்க அனுமதி அளிக்குமாறு கேட்டார். இதையடுத்து, அகமதாபாத் விமான நிலைய அதிகாரிகள் அனுமதி அளித்தனர். இறங்கும்போது அசம்பாவிதம் ஏதும் ஏற்படாத வகையில் ஓடுபாதையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் விரைவாக செய்யப்பட்டன.
சற்று நேரத்தில் அகமதாபாத் நகர விமான நிலைய வான் எல்லையை வட்டமிட்ட அந்த விமானம் பத்திரமாக தரையிறங்கியது. இரண்டாவது என்ஜின் முற்றிலுமாக செயலிழந்து கிடந்ததை உரிய நேரத்தில் விமானி கவனித்து, அவசர நடவடிக்கை எடுத்ததால் 186 பயணிகளும் உயிர் தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த A320 நியோ ரக விமானத்தில் பிராட் அண்ட் விட்னி என்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன. இப்படி நடுவானில்
பறக்கும்போது அடிக்கடி என்ஜின்கள் செயலிழப்பதால் பொருத்தப்பட்ட 11 ’A320 நியோ’ ரக விமானங்களுக்கு உள்நாட்டு விமான போக்குவரத்து துறை இயக்குனரகம் இன்று தடை விதித்துள்ளது.
முன்னதாக, PW1100 ரக என்ஜின்கள் பொருத்தப்பட்ட விமானங்களின் பாதுகாப்பு தொடர்பாக மறுஆய்வு செய்ய வேண்டும் என கடந்த மாதம் உள்நாட்டு விமான போக்குவரத்து துறை இயக்குனரகம் அறிவுறுத்தி இருந்தது.