திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. இதனால் இலவச தரிசனத்துக்கு 15 மணி நேரத்துக்கு மேல் ஆனதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
Published on

திருமலை:

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் வழியாக தரிசனத்துக்கு அனுப்பப்படுகின்றனர். நேற்று வைகுண்டம் கியூ காம்ப்ளக்சின் 31 அறைகளும் நிரம்பி பக்தர்கள் வெளியிலும் நீண்ட வரிசையில் நின்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை 61 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். இலவச தரிசனத்துக்கு 15 மணி நேரத்துக்கு மேல் ஆனதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆன்லைன் மூலம் ரூ.300 கட்டணத்தில் பதிவு செய்த பக்தர்களுக்கு 4 மணி நேரமும், ஸ்ரீவாரிமெட்டு மற்றும் அலிபிரி மலைப்பாதை வழியாக திவ்ய தரிசன டோக்கன் பெற்று வந்தவர்களின் தரிசனத்துக்கு 3 மணி நேரமும் ஆனது.

பக்தர்கள் நேற்று செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டதில் ரூ.2 கோடியே 55 லட்சம் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோடைவிடுமுறை தொடங்க உள்ள நிலையில் திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருப்பதிக்கு வரும் பக்தர்கள் ஏழுமலையான் கோவில் உள்ள திருமலைக்கு செல்வதற்காக திருப்பதி-திருமலை இடையே தொடர்ந்து பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

தற்போது ஆந்திர மாநில அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் தினமும் 396 பஸ்கள் 2 ஆயிரம் தடவை இயக்கப்படுகிறது. இந்த நிலையில் விடுமுறை நாட்களையொட்டி பக்தர்கள் வசதிக்காக திருப்பதியிலிருந்து ஆந்திர மாநிலத்தின் முக்கிய நகரங்களுக்கும் தமிழகத்தில் வேலூர் மற்றும் சென்னைக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக ஆந்திர போக்குவரத்துக் கழக பொது மேலாளர் பாஸ்கரரெட்டி தெரிவித்தார். #Tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com