தேரா சச்சா சவுதா தலைவர் மீதான பாலியல் பலாத்கார வழக்கில் இன்று தீர்ப்பு: ஆயுத பிரயோகத்துக்கு கோர்ட் அனுமதி

சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங் மீதான பாலியல் பலாத்கார வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் நிலையில் கலவரச் சூழ்நிலையை கட்டுப்படுத்த ஆயுதங்களை பயன்படுத்த ஐகோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.
தேரா சச்சா சவுதா தலைவர் மீதான பாலியல் பலாத்கார வழக்கில் இன்று தீர்ப்பு: ஆயுத பிரயோகத்துக்கு கோர்ட் அனுமதி
Published on

புதுடெல்லி:

சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங் மீதான பாலியல் பலாத்கார வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. கலவரம் ஏற்படும் சூழ்நிலை உள்ளதால் பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் கூடுதலாக 15000 துணை ராணுவப்படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

தேரா சச்சா சவுதா என்ற ஆன்மிக அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹிம் சிங். இவர் இரண்டு பெண் சீடர்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக அவர் மீது 2002-ம் ஆண்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்பேரில் அவர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. நீண்ட காலம் நடைபெற்று வந்த இந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

அரியானா மாநிலம் பஞ்ச்குலா நீதிமன்றத்தில் வழங்கப்படும் இந்த தீர்ப்பு, சாமியார் குர்மீத்துக்கு எதிராக இருக்கும் பட்சத்தில் பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் உள்ள அவரது ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபடலாம் என கூறப்படுகிறது. எனவே, சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். முக்கிய இடங்களில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் அதனை சமாளிக்கும் விதமாக 150 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் (15000 வீரர்கள்) நேற்று குவிக்கப்பட்டனர். பஞ்சகுலா, சிர்சா, ஹிசார் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு படையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

சமூக வலைத்தளங்களை போலீசார் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். பொதுமக்கள் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மொபைல் இன்டர்நெட் சேவைகள் 72 மணி நேரத்திற்கு ரத்து செய்யப்பட்டுள்ளன. பஞ்சாப் மற்றும் அரியானாவுக்கு செல்லும் 29 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல்வேறு வழித்தடங்களில் பேருந்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

இதற்கிடையே, தனக்கு எதிராக தீர்ப்பு அளிக்கப்பட்டால் அமைதி காக்க வேண்டும் என குர்மீத் ராம் ரஹிம் சிங் இன்று வீடியோ மூலம் தனது அபிமானிகளுக்கு ஒரு செய்தியை அனுப்பினார். அவரது தலைமையில் 500-க்கும் அதிகமானவர்கள் இன்று காலை வழிபாடு செய்தனர்.

இதையடுத்து, அமைதியாக இருந்த அவரது ஆதரவாளர்கள் தீர்ப்புக்கு பிறகு கலவரத்தில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கலவரச் சூழல் ஏற்பட்டால் பாதுகாப்பு முகமைகள் தேவைக்கேற்ப ஆயுதங்களை பயன்படுத்தி பதற்றத்தை தணிக்கலாம் என்று பஞ்சாப் மற்றும் அரியானா ஐகோர்ட் இன்று அனுமதி அளித்துள்ளது. அரசியல், சமூகம், மதம்சார்ந்த எந்த தலைவரும் வன்முறையை தூண்டும் வகையில் அறிக்கைகள் வெளியிட மாட்டார்கள் என்றும் ஐகோர்ட் குறிப்பிட்டுள்ளது.

இதையடுத்து, இன்று அளிக்கப்படும் தீர்ப்பு குர்மீத் ராம் ரஹிம் சிங்-குக்கு எதிராக அமைந்துவிட்டால் அவரது ஆதரவாளர்கள் நிச்சயமாக வன்முறையில் குதிப்பார்கள். அவர்களை அடக்க போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் தடியடி, கண்ணீர் புகை மற்றும் அதிகபட்சமாக துப்பாக்கிச் சூடு நடத்தக்கூடும் என அஞ்சப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com