

2018-ம் ஆண்டுக்கான தியோதர் கோப்பை தொடர் இமாச்சலப்பிரதேசத்தின் தர்மசாலா மைதானத்தில் இன்று தொடங்கியது. முதல் ஆட்டத்தில் இந்தியா பி அணி, கர்நாடகா அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற கர்நாடகா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து கர்நாடகா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மயன்க் அகர்வால், கருண் நாயர் ஆகியோர் களமிறங்கினர். கருண் நாயர் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் மயன்க்-உடன், ரவிகுமார் சம்ர்த் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தனர். மயன்க் அகர்வால் 44 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். நிதானமாக விளையாடிய ரவிகுமார் அரைசதம் கடந்தார். அதன்பின் பவன் தேஷ்பாண்டே களமிறங்கினார்.
இருவரும் ஜோடி சேர்ந்து ரன் குவித்தனர். சிறப்பாக விளையாடிய ரவிகுமார் சதம் அடித்தார். தேஷ்பாண்டே 46 ரன்னில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து வந்த ஸ்டுவர்ட் பின்னி 2 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய சி.எம். கவிதம் 28 ரன்களிலும், கிருஷ்ணப்பா கவுதம் 20 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ரவிகுமார் 115 பந்துகளில் 117 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கர்நாடகா அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 296 ரன்கள் எடுத்தது. இந்தியா பி அணி தரப்பில் சித்தார்த் கவுல் 3 விக்கெட்டும், ஹர்ஷல் பட்டேல், ஜெயந்த் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து 297 ரன்கள் என்ற இலக்குடன் இந்தியா பி அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அபிமன்யூ ஈஸ்வரன் 5 ரன்களிலும், ஸ்ரீகர் பரத் 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய விஹாரி 4 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் ஷ்ரேயாஸ் ஐயர்-உடன் மனோஜ் திவாரி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது.
ஷ்ரேயாஸ் ஐயர் 33 ரன்களில் ஆட்டமிழக்க. அடுத்ததாக சித்தேஷ் லேட் களமிறங்கினார். எதிர்முனையில் சிறப்பாக விளையாடிய மனோஜ் திவாரி அரைசதம் கடந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடி ரன் சேர்த்தது. மனோஜ் திவாரி சதம் அடித்தார். அவர் 110 பந்துகளில் 120 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்தவர்கள் ரன் எடுக்க தவறினர். எதிர்முனையில் நிதானமாக விளையாடி வந்த சித்தேஷ் அரைசதம் கடந்தார்.
இந்தியா பி அணியின் வெற்றிக்கு 4 பந்துகளில் 8 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், சித்தேஷ் 70 ரன்கள் எடுத்து 50-வது ஓவரின் 3-வது பந்தில் ஆட்டமிழந்தார். இந்தியா பி அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 290 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 6 ரன்கள் வித்தியாசத்தில் கர்நாடகா அணி திரில் வெற்றி பெற்றது. கர்நாடகா அணி பந்துவீச்சில் ஷ்ரேயாஸ் கோபால் 3 விக்கெட்டும், பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.