நியூட்ரினோ திட்டத்தை கைவிட வலியுறுத்தி தேனியில் மே 6-ந் தேதி தினகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம்

நியூட்ரினோ திட்டத்தை கைவிட வலியுறுத்தி தேனியில் மே 6-ந் தேதி டி.டி.வி.தினகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தெரிவித்துள்ளது.#TTVDinakaran #AMMK
நியூட்ரினோ திட்டத்தை கைவிட வலியுறுத்தி தேனியில் மே 6-ந் தேதி தினகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம்
Published on

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தேனி மாவட்டம் தேவாரம் பகுதி பொட்டிபுரம் கிராமத்தில் நியூட்ரினோ ஆராய்ச்சி மையத்தை அமைப்பதற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் அனுமதி கொடுத்திருப்பது மேற்கு தொடர்ச்சி மலையை நாசமாக்கிடும் ஒரு பெரும் சதி. இதில் எடப்பாடி பழனிசாமியின் அரசு வழக்கம்போல் ஊமையாக இருந்துகொண்டு இத்திட்டத்தை எதிர்க்காமல் உள்ளது.

முல்லைப் பெரியாறு அணைக்கும், மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சுற்று வட்டார நீர் ஆதாரத்திற்கும், இயற்கை சூழலுக்கும், தேனி மாவட்டத்தின் விவசாயத்திற்கும் மிகப்பெரிய ஆபத்தை இத்திட்டம் ஏற்படுத்தும். நியூட்ரினோ கதிர்கள் தொடர்பான ஆராய்ச்சியை மேற்கொள்வதன் மூலம் இப்பகுதியை ஒரு பரிசோதனைக்கூடமாக்க முயலும் மத்திய அரசுக்கும், கைக்கட்டி வாய்ப்பொத்தி நிற்கும் எடப்பாடி பழனிசாமியின் அரசுக்கும், மக்கள் உணர்வுகளை எடுத்துரைக்கும் வகையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரியபோது, வழக்கம்போல எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின் பேரில் காவல்துறை அனுமதி மறுத்த காரணத்தால், சென்னை ஐகோர்ட்டு மதுரைக் கிளையில் அனுமதி கோரப்பட்டு, அதன்படி வரும் மே 6-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த பரிசீலித்து அனுமதி அளிக்குமாறு காவல்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டதன் பேரில், தற்போது அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.

மக்களின் கருத்துகளையும், அவர்களின் எதிர்ப்புகளையும் புறந்தள்ளிவிட்டு, இயற்கை நீதிக்கு முரணான வகையில் இத்திட்டத்திற்கு அனுமதியளித்துள்ள மத்திய அரசுக்கும், தமிழகத்தில் அவர்கள் அறிவிக்கும் மக்கள்விரோத திட்டங்கள் அனைத்துக்கும் வாய்மூடி கீழ்ப்படிந்து சேவகம் செய்யும் எடப்பாடி பழனிசாமி அரசுக்கும் கண்டனத்தை தெரிவிக்கும் வகையிலும், மத்திய அரசு இத்திட்டத்தை உடனடியாக கைவிட வலியுறுத்தியும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரும் 6-5-2018 அன்று தேனி மாவட்டம் பொட்டிபுரம் ஊராட்சி, டி.புதுக்கோட்டை கிராமத்தில் மாலை 4 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இப்போராட்டத்தில் கட்சியின் துணைப்பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. கண்டன பேருரை ஆற்ற உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com