டெல்லியில் உடலில் இலை, தழைகளை கட்டியபடி தமிழக விவசாயிகள் போராட்டம்

டெல்லியில் உடலில் இலை, தழைகளை கட்டியபடி தமிழக விவசாயிகள் நேற்று டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல்லியில் உடலில் இலை, தழைகளை கட்டியபடி தமிழக விவசாயிகள் போராட்டம்
Published on

புதுடெல்லி:

கடன் தள்ளுபடி, விளைபொருட்களுக்கு லாபகரமான விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர்மந்தரில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

தினமும் நூதனமான முறையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், நேற்றுமுன்தினம் உடலில் சேறு பூசி போராட்டம் நடத்தினர்.

இந்தநிலையில் நேற்று 22-வது நாளாக போராட்டம் நடைபெற்றது. போராட்டக்குழு தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் உடலில் இலை, தழைகளை கட்டியபடி ஆதிவாசிகள் போல ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தினர். இதில் சிலர் மனித மண்டை ஓடுகளை கழுத்தில் தொங்க விட்டபடி கலந்து கொண்டனர்.

அப்போது மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள் கோஷம் எழுப்பினர்.

பின்னர், அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-

வறட்சி காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். விவசாயிகளின் பிரச்சினைகளை பிரதமர் நரேந்திரமோடி காது கொடுத்து கேட்பதில்லை. சமூக வலைதளங்களான ‘வாட்ஸ்-அப்’, ‘பேஸ் புக்’ ஆகியவற்றின் பயன்பாட்டில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. ஆனால் விவசாயிகள் வறுமையாலும், வறட்சியாலும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

பிரதமர் நரேந்திரமோடி பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது, இந்தியாவை ‘டிஜிட்டல்’ மயமாக்குவோம் என்று கூறினார். ஆனால் விவசாயிகளின் தற்போதைய நிலைமை கற்காலத்தை நோக்கி செல்வது போல உள்ளது. இதனை உணர்த்தும் வகையில் உடலில் இலை, தழைகளை கட்டிக்கொண்டு ஆதிவாசிகள் போல நூதன போராட்டத்தில் ஈடுபட்டோம். விவசாயிகளின் பிரச்சினை தீரும் வரை எங்களின் போராட்டம் தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com